காசா எல்லையில் இருந்து படைகள் வெளியேற்றமா? இஸ்ரேல் மறுப்பு

இஸ்ரேல் - காசா இடையே நடக்கும் போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.

Update: 2024-08-22 18:37 GMT

ஜெருசலேம்,

இஸ்ரேல்-காசா போர் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

எனவே இந்த போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் காசாவில் பதுங்கி இருக்கும் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும்வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் இஸ்ரேல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் காசா போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகுவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இஸ்ரேல்-காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதாகவும், காசா எல்லையில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறுவதாக தகவல் பரவின. ஆனால் இதனை முற்றிலும் மறுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு `காசா எல்லையில் இருந்து இஸ்ரேல் படைகளை தற்போது திரும்ப பெற போவதில்லை' என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்