நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி... அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட நேட்டோ நாடுகளின் கொடிகள்

நேட்டோ கூட்டமைப்பு நாடுகளில் இருந்து சுமார் 1,400 மீட்பு படையினர் துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Update: 2023-02-08 10:45 GMT

Image Courtesy : @NATO twitter

பிரஸ்சல்ஸ்,

துருக்கி- சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருக்கியில் 7,108 பேரும், சிரியாவில் 2,530 பேரும் உயிரிழந்துள்ளனர், மொத்தம் 9,630 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் மீட்பு பணிகளில் துருக்கி அரசுக்கு உதவ இந்திய உள்பட பல்வேறு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவில் இருந்து பேரிடர் மீட்பு படையினர், மருத்துவர்கள் உள்ளிட்ட குழுவினர் துருக்கிக்கு விரைந்துள்ளனர்.

அதே போல் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளில் இருந்து சுமார் 1,400 மீட்பு படையினர் துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். துருக்கியின் வரலாற்றில் மிக மோசமான நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது. இந்த சமயத்தில் பெல்ஜியம் நாட்டில் உள்ள பிரஸ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள நேட்டோ தலைமையகத்தில், நேட்டொ நாடுகளின் கொடிகள் அனைத்தும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. 



Tags:    

மேலும் செய்திகள்