2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்கமாட்டேன் - எலான் மஸ்க்
சமூகவலைதளங்களில் எலான் மஸ்க் வெளியிடும் கருத்துகள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.
வாஷிங்டன்,
2024 தேர்தலில் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு வாக்களிப்பதை தன்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்று உலக கோடீஸ்வரரும், டெஸ்லா நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் கூறினார்.
எலான் மஸ்க் அமெரிக்காவில் வசித்து வருகிறார். சமூகவலைதளங்களில் இவர் வெளியிடும் கருத்துகள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். அந்தவகையில் `நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், வெள்ளை மாளிகையில் நடைபெறும் மின்சார வாகனங்களுக்கான உச்சி மாநாட்டில் டெஸ்லா நிறுவனத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதன் மூலம் தான் அவமதிக்கப்பட்டதால் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் ஜோ பைடனுக்கு வாக்களிக்க போவதில்லை என எலான் மஸ்க் பகிரங்கமாக அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து டிரம்பிற்கு வாக்களிப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, இது டிரம்புக்கான ஆதரவை குறிக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக 2020 ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனுக்கு வாக்களித்ததாக எலான் மஸ்க் கூறியிருந்தார். ஆனால் ஜனாதிபதி பதவியேற்றதிலிருந்து இருவருக்கும் இடையே சர்ச்சைக்குரியவகையில் உறவு நீடிப்பது குறிப்பிடத்தக்கது.