அல்கொய்தா தலைவர் கொலை : அதிபர் ஜோ பைடன் தலைமைக்கு ஒபாமா பாராட்டு
சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி நேற்று கொல்லப்பட்டார்.;
வாஷிங்டன்,
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாத அமைப்பு அல் கொய்தா. இந்த அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த ஒசாமா பின் லேடனை அமெரிக்காவின் சீல் படையினர் அதிரடியாக பாகிஸ்தானில் வைத்து சுட்டுக் கொன்றனர்.
இதன் பின்னர் இந்த அமைப்பு தங்களது செயல்பாடுகளை குறைத்துக் கொண்டநிலையில் மீண்டும் தலை தூக்க தொடங்கினர். தற்போது அந்த பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நோக்கில் அமெரிக்க படைகள் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் சிஐஏ ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி நேற்று கொல்லப்பட்டார். இந்த நிலையில் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஒபாமா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "செப்டம்பர் 11 தாக்குதலுக்கு 20 ஆண்டுகளுக்கு பிறகு, அந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரும், அல்-கொய்தாவின் தலைவரான அய்மான் அல்-ஜவாஹிரி இறுதியாக நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்.
அதிபர் பைடனின் தலைமைக்கு பாராட்டுக்கள். இந்த தருணத்திற்காக பல தசாப்தங்களாக உழைத்த உளவுத்துறை அதிகாரிகள் தங்களில் ஒருவருக்கு கூட சிறிய பாதிப்பும் இன்றி இதை நிகழ்த்தி காட்டியுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.