இலங்கை அதிபர் மாளிகை, பிரதமர் இல்லத்தில் 1,000க்கும் மேற்பட்ட கலை பொருட்கள் மாயம்

இலங்கை அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்தில் இருந்த 1,000க்கும் மேற்பட்ட கலை பொருட்கள் மாயம் ஆகியுள்ளன.

Update: 2022-07-24 12:20 GMT



கொழும்பு,



இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் நடத்திய தீவிர போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்தனர்.

இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி விட்டார்.

அவர் எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில், கோத்தபயா தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு ராணுவ விமானத்தில் தப்பி சென்று விட்டார். இலங்கையில் போராட்டக்காரர்கள், பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில், கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றார். அதிபர் பதவியில் இருந்தும் விலகினார். புதிய அதிபருக்கான தேர்தலில் இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று சமீபத்தில் அதிபராக பதவியேற்று கொண்டார்.

எனினும், அவருக்கு எதிராகவும் போராட்டம் வலு பெற்று வருகிறது. இந்நிலையில், இலங்கை அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்தில் இருந்த 1,000க்கும் மேற்பட்ட கலை பொருட்கள் மாயம் ஆகியுள்ளன என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

இதன்மீது நடந்த தொடக்க கட்ட விசாரணை அடிப்படையில், இந்த பொருட்களின் சரியான எண்ணிக்கையை கண்டறிவது போலீசாருக்கு கடினம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என இந்த கட்டிடம் அறிவிக்கப்பட்ட போதும், அதிபர் மாளிகையில் வைக்கப்பட்ட சிலைகள் மற்றும் கலை பொருட்களின் ஆவண பதிவு எதனையும் இலங்கை தொல்லியல் துறை வைத்திருக்கவில்லை.

அதனால் காணாமல் போன அவற்றை பற்றிய சரியான எண்ணிக்கை தெரியவரவில்லை. இதுபற்றி விசாரணை நடத்துவதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்