பிரான்சில் நடுவானில் விமான சேசிங்... அதிகாரிகளுக்கு போக்கு காட்டிய போதை பொருள் கடத்தல்காரர்

பிரான்சில் நடுவானில் விமான சேசிங்கில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு போலந்து நாட்டு போதை பொருள் கடத்தல்காரர் போக்கு காட்டிய சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2023-06-29 13:51 GMT

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கே, ஒரு நபர் அமர்ந்து செல்ல கூடிய இருக்கை கொண்ட விமானத்தில் ஒருவர் பயணம் செய்து உள்ளார். அவர் போதை பொருள் கடத்தல்காரர் என கூறப்படுகிறது.

ஆனால், அவர் ஆர்டிக் என்ற தடை செய்யப்பட்ட வான்வெளி பகுதி வழியே பறந்து சென்று உள்ளார். அதன் அருகே அணு உலை ஒன்று உள்ளது. சந்தேகத்திற்குரிய வகையில் அந்த விமானம் பறந்து சென்று உள்ளது.

இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் பறந்தது. உடனடியாக அவர்கள் அதுபற்றி ஆய்வு செய்ய சென்றனர். இதன்பின் ரபேல் போர் விமானம் ஒன்று அந்த விமானத்திற்கு குறுக்காக சென்று அதனை வழிமறித்தது.

இதனை கவனித்த அந்த விமானி, தனது இருக்கையில் இருந்தபடி கதவை திறந்து சில போதை பொருட்கள் கொண்ட பாக்கெட்டுகளை வெளியே வீசியுள்ளார். அதன்பின், ஆர்டிக் பகுதியில் வேறொரு இடத்தில் அவர் தரையிறங்கி உள்ளார்.

அவரை துரத்தி சென்ற அதிகாரிகள் கைது செய்தனர். போலந்து நாட்டை சேர்ந்த அவர் கடந்த காலங்களில் போதை பொருள் குற்றசம்பவங்களுடன் தொடர்பில் உள்ளவர் என தெரிய வந்தது.

அவரது விமானமும் போலந்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில் சோதனை செய்ததில், 45 ஆயிரம் யூரோ பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்த பகுதியில் கிடந்த 15 பாக்கெட்டுகளையும் அதிகாரிகள் கைப்பற்றினர். போதை பொருட்கள் இருந்த அந்த பாக்கெட்டுகளை ஆய்வுக்கு கொண்டு சென்று உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்