இளவரசர் ஆண்ட்ரூ முதல் கிளிண்டன் வரை... பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு ஆவணத்தில் இடம்பெற்ற வி.ஐ.பி.க்கள்
ஆவணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்கள் வெளியாகியிருக்கும் நிலையில், வரும் நாட்களில் மேலும் அதிகமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற பிரபல கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவருக்கு நெருக்கமானவர்கள், வழக்குகளின் விவரம் தொடர்பான நீதிமன்ற ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது. ஜெப்ரி எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான விர்ஜீனியா கியூப்ரே, ஜெப்ரியின் முன்னாள் காதலி கிஸ்லைன் மேக்ஸ்வெல்லுக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில், நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, 950 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.
எப்ஸ்டீனுக்காக சிறுமிகளை அழைத்து வந்ததால், கிஸ்லைன் மேக்ஸ்வெல் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. பாலியல் தொழிலுக்கான ஆட்கடத்தல் மற்றும் அதன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
இப்போது வெளியான நீதிமன்ற ஆவணத்தில், பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், மறைந்த புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், மற்றும் மேஜிக் கலைஞர் டேவிட் காப்பர்ஃபீல்ட் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆவணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்கள் வெளியாகியிருக்கும் நிலையில், வரும் நாட்களில் மேலும் அதிகமான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விர்ஜீனியா கியூப்ரே 2021ல் இளவரசர் ஆண்ட்ருவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், தான் 17 வயதாக இருந்தபோது, இளவரசர் ஆண்ட்ரூ தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்த வழக்கை முடித்து வைப்பதற்காக, 2022ல் விர்ஜீனியா கியூப்ரேவுக்கு பிரிட்டிஷ் அரச குடும்பம் பல லட்சம் பணம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு
பிரபலங்கள், அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் கோடீஸ்வரர் எப்ஸ்டீன், இவர், 14 வயது சிறுமியுடன் உடலுறவு கொள்வதற்காக பணம் கொடுத்ததுடன், பாலியல் தொந்தரவு கொடுத்ததாக 2005ல் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக விசாரணைக்குப் பின்னர், புளோரிடாவின் பாம் கடற்கரையில் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பின், பல சிறுமிகள் இதேபோன்று குற்றம்சாட்டினர். சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. விசாரணையில் 36 சிறுமிகள் அவரால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதில் ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்டு 2008ல் அவருக்கு 13 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2019ஆம் ஆண்டு சிறையிலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார்.