தவறுதலாக பணயக்கைதிகளை கொன்ற இஸ்ரேல் ராணுவம்.. விசாரணை அறிக்கையில் பகீர் தகவல்

காசாவில் இன்னும் 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் ஹமாஸ் அமைப்பிடம் சிக்கியுள்ளனர்.

Update: 2023-12-29 07:20 GMT

ஜெருசலேம்:

ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி, சுமார் 250 பேரை பணயக்கைதிகளாக பிடித்து காசாவுக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.

தற்காலிக போர் நிறுத்த காலத்தில் பணயக்கைதிகளில் கிட்டத்தட்ட பாதி பேர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்க இஸ்ரேல் படைகள் காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது காசாவின் ஷேஜாயா நகரில், தவறுதலாக 3 பணயக்கைதிகளை சுட்டுக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வருத்தம் தெரிவித்தது. மேலும், இது ராணுவ விதிமீறல் என்பதால், இச்சம்பவம் குறித்து ராணுவம் தரப்பில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் ராணுவ விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

காசாவின் ஷேஜாயாவில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியிருந்த கட்டிடத்தை கடந்த 10ஆம் தேதி இஸ்ரேல் வீரர்கள் சுற்றி வளைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது ஹீப்ரு மொழியில் பணயக்கைதிகள் உதவி கேட்டு கூச்சலிட்டதை வீரர்கள் கேட்டுள்ளனர். ஆனால், இது வீரர்களை உள்ளே வரவழைப்பதற்காக ஹமாஸ் அமைப்பினர் செய்யும் தந்திரம் என நினைத்து முன்னேறி செல்லவில்லை.

அத்துடன், அந்த கட்டிடத்தில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதியதால் உடனடியாக வெளியேறி தாக்குதல் நடத்தினர். அங்கிருந்து தப்ப முயன்ற ஹமாஸ் அமைப்பினர் 5 பேரை சுட்டுக்கொன்றனர்.

பின்னர் பணயக்கைதிகள் 3 பேரும் அந்த கட்டிடத்தை விட்டு வெளியேறியிருக்கலாம். கடந்த 15ஆம் தேதி அவர்களை எதிரிகள் என தவறாக நினைத்து, இஸ்ரேலிய வீரர்கள் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

துப்பாக்கி சூட்டில் 2 பேர் உடனடியாக உயிரிழந்தனர். மூன்றாவது பணயக்கைதி தப்பி சென்றுள்ளார். அவரை அடையாளம் காணவேண்டும் என்பதற்காக துப்பாக்கியால் சுடுவதை நிறுத்துமாறு படையினருக்கு உத்தரவிடப்பட்டது.

அப்போது அழுதுகொண்டே அந்த பணயக்கைதி உதவி கேட்டிருக்கிறார். இதையடுத்து, இஸ்ரேல் கமாண்டர்கள் அந்த பணயக்கைதியிடம், வீரர்களை நோக்கி வரும்படி கூற, அவரும் முன்னேறி வந்திருக்கிறார்.

ஆனால், அருகில் இருந்த பீரங்கியில் இருந்து சத்தம் கேட்டுக்கொண்டிருந்ததால், தாக்குதலை நிறுத்தும்படி பிறப்பித்த உத்தரவானது, முன்களத்தில் நின்றிருந்த 2 வீரர்களுக்கு கேட்கவில்லை. எனவே, முன்னேறி வந்த பணயக் கைதியை வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

தவறுதலாக கொல்லப்பட்ட மூன்று பணயக்கைதிகளும் சட்டை இல்லாமல் இருந்தனர். ஒருவர் கையில் வெள்ளைக் கொடி இருந்தது. 

இவ்வாறு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்