தரைவழி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்: 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் தகவல்

கடந்த 24 மணி நேரத்தில் 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாவும், 156 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-01 22:12 GMT

கோப்புப்படம்

பெய்ரூட்,

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்த மறுநாளே லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் வடக்கு பகுதிகளை நோக்கி ராக்கெட் குண்டுகளை வீச தொடங்கினர். அதற்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனானில் வான்வழி தாக்குதல்களை நடத்தியது. இது இருதரப்புக்கும் இடையில் பெரிய அளவிலான மோதலுக்கு வழிவகுத்தது. இருதரப்பும் பரஸ்பரம் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் ஒரு வாரத்துக்கும் மேலாக தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்கு லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதில் ஹிஸ்புல்லா அமைப்பினர் மற்றும் அப்பாவி பொதுமக்கள் என ஏராளமானோர் கொத்து, கொத்தாக கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தசூழலில் நேற்று முன்தினம் லெபனான் முழுவதும் நடத்தப்பட்ட வான்தாக்குதல்களில் 97 பேர் பலியானதாகவும், 172 பேர் படுகாயம் அடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாவும், 156 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே ஏற்கனவே இஸ்ரேலின் இடைவிடாத வான்வழி தாக்குதல்களில் லெபனானின் பல்வேறு நகரங்கள் சின்னாபின்னமாகியுள்ள நிலையில் நேற்று லெபனான் மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே உடனடி போர் நிறுத்தம் தேவை என ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் இஸ்ரேல் லெபனானில் தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் இந்த திடீர் நடவடிக்கையால் இஸ்ரேல்-லெபனான் இடையேயான போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்