பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழப்பு

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா மற்றும் முக்கிய கமாண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Update: 2024-10-08 07:40 GMT

ஜெருசலேம்:

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான சண்டை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. அதிக மக்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேல் உக்கிரமான போரை தொடங்கியது. இந்த போர் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைடைவந்துள்ளது.

இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு, ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

குறிப்பாக, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் இருப்பிடங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் அந்த அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா மற்றும் முக்கிய கமாண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெய்ரூட்டில் இன்று நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி சுஹைல் ஹுசைனி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்ட சுஹைல் ஹுசைனி, ஹிஸ்புல்லா அமைப்பின் தளவாடங்கள், வரவு செலவுத் திட்டம் மற்றும் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஈரானில் இருந்து நவீன ஆயுதங்களை கொண்டு வந்து, அவற்றை வெவ்வேறு ஹிஸ்புல்லா பிரிவுகளுக்கு விநியோகிப்பதில் ஹுசைனி ஈடுபட்டதாகவும், அவர் ஹிஸ்புல்லா ராணுவ கவுன்சிலில் உறுப்பினராக இருந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்