லெபனானில் ஹிஜ்புல்லாவை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

லெபனான் நாட்டின் சிடான் நகருக்கு தெற்கே தொழிற்சாலைகள் மற்றும் ஆயுத கிடங்குகள் உள்ள பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது.

Update: 2024-02-19 23:28 GMT

பெய்ரூட்,

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர். 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். அவர்களின் பிடியில் உள்ள 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது.

இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், லெபனான் நாட்டில் ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. அதனை வெளியேற்றும்படி இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது.

காசா போரில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல்களை நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், 170-க்கும் மேற்பட்ட ஹிஜ்புல்லா போராளிகள் மற்றும் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், லெபனானின் தெற்கே எல்லை பகுதியில் ஹிஜ்புல்லா ஆயுத குழுவை நோக்கி இஸ்ரேல் ராணுவம் நேற்று வான்வழி தாக்குதலை நடத்தியது.

லெபனான் நாட்டின் சிடான் நகருக்கு தெற்கே தொழிற்சாலைகள் மற்றும் ஆயுத கிடங்குகள் உள்ள பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 14 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலர் சிரிய நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர்.

இதுபற்றி இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் கூறும்போது, லெபனானின் பயங்கரவாத குழுவான ஹிஜ்புல்லா அமைப்பு நடத்திய ஆளில்லா விமான தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என கூறினார்.

இந்நிலையில், சிடான் என்ற துறைமுக நகரருகே ஆயுத கிடங்குகள் மீது இஸ்ரேல் ராணுவம் 2 வான்வழி தாக்குதல்களை நடத்தியது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்