வெள்ளிக்கிழமைக்கு முன் பணயக்கைதிகள் யாரும் விடுவிக்கப்பட மாட்டார்கள் - இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல்

காசாவில் இன்று (வியாழக்கிழமை) முதல் 4 நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

Update: 2023-11-22 23:05 GMT

Image Courtacy: AFP

டெல் அவிவ்,

ஹமாஸ்-இஸ்ரேல் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருவதால் காசாவில் உள்ள பொதுமக்கள் மனிதாபிமான உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவி கிடைக்க உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டன. குறிப்பாக அமெரிக்கா உதவியுடன் கத்தார் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்தது.

இஸ்ரேலின் தாக்குதலில் காசா நகரம் சின்னபின்னமாகி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரின் நிலைகளை மட்டுமே குறிவைப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறினாலும், அப்பாவி மக்கள் கொத்து, கொத்தாக கொன்று குவிக்கப்படும் சோகம் தொடர்கிறது.

கடந்த 48 நாட்களாக காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆவர்.

மேலும் இந்த போர் காசாவில் மிகவும் மேசாமான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. காசாவின் மக்கள்தொகையில் முக்கால்வாசி பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி நெரிசலான மற்றும் சுகாதாரமற்ற இடங்களில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதோடு காசாவுக்கு உணவு, குடிநீர், எரிவாயு போன்றவற்றின் வினியோகத்தை இஸ்ரேல் நிறுத்திவிட்டதால் பல லட்சம் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

மின்சாரம் இல்லாததாலும், உயிர் காக்கும் மருந்துகள் கிடைக்காததாலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் ஆஸ்பத்திரிகள் திணறி வருகின்றன. இப்படி அப்பாவி மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த போரை உடனடியாக நிறுத்த வேண்டுமென உலக நாடுகள் பலவும் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இஸ்ரேல் அதை தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

அதே வேளையில் பிணை கைதிகளை விடுவிப்பதற்காக குறிப்பிட்ட காலத்துக்கு போரை நிறுத்தி வைக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல் கூறியது.

அதன்படி தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவிப்பதற்காக எகிப்து, கத்தார், அமெரிக்கா ஆகிய நாடுகள் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மத்தியஸ்தம் செய்து வந்தன. பல வாரங்களாக நடந்து வந்த பேச்சுவார்த்தையில் தற்காலிக போர் நிறுத்தத்துக்கான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் பிணை கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக காசாவில் 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தலைமையில் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில் தற்காலிக போர் நிறுத்தம் குறித்த முடிவு எடுக்கப்பட்டது.

இது குறித்து இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிணை கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வர இஸ்ரேல் அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்கான முதல் கட்ட நடவடிக்கைக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 4 நாட்களுக்கு காசாவில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் இஸ்ரேல் நிறுத்தி வைக்கும். இந்த காலக்கட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 பிணை கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்தம் தொடர்பாக கத்தார் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "4 நாள் போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேல் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன பெண்கள், சிறுவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விடுவிக்கப்படுவர். மேலும் காசாவுக்குள் கூடுதல் மனிதாபிமான உதவிகள் அனுமதிக்கப்படும்" என கூறியுள்ளது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமைக்கு முன் பணயக்கைதிகள் யாரும் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினரும் ஒரு போர்நிறுத்தத்தை ஒப்புக்கொண்ட போதிலும், காசா சண்டையில் எந்த இடைநிறுத்தமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக இந்த ஒப்பந்தம் புதன்கிழமை தொடக்கத்தில் இஸ்ரேலிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இன்று நடைமுறைக்கு வரும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்