இஸ்ரேல்-ஹமாஸ் போர் "இன்னும் பல மாதங்களுக்கு" தொடரும் - நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

இஸ்ரேல் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதால் மனிதாபிமான உதவிகளை கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-31 00:09 GMT

Image Courtacy: AFP

காசா,

பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகரம் மீது இஸ்ரேல் கடந்த அக்டோர் மாதம் 7-ந்தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. போர் தொடங்கிய சமயத்தில் வடக்கு காசாவை குறிவைத்து சரமாரியாக தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் பின்னர் தெற்கு காசாவை நோக்கி தாக்குதல்களை விரிவுப்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக மத்திய காசாவில் இஸ்ரேல் ராணுவம் தரைவழியாகவும், வான்வழியாகவும் தீவிரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேலின் இந்த ஆக்ரோஷமான தாக்குதல்களால் காசாவில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் காசாவில் இதுவரை 21 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

ஏற்கனவே போரின் விளைவால் காசாவில் உணவு, குடிநீர், உயிர்காக்கும் மருந்து உள்ளிடவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதால் பாதிகப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் காசாவில் மனிதாபிமான நிலைமைகள் மிகவும் மோசமடைந்து வருவதாக ஐ.நா. எச்சரித்துள்ளது.

இந்நிலையில் ஹமாசுக்கு எதிரான போர் "இன்னும் பல மாதங்களுக்கு" தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும் ஜோ பைடன் நிர்வாகத்தின் தொடர்ச்சியான ஆதரவிற்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் 147 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,223 கோடி) மதிப்பிலான ராணுவ தளவாடங்களை இஸ்ரேலுக்கு விற்பனை செய்யவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

Tags:    

மேலும் செய்திகள்