சிரியாவில் தூதரகம் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்; 11 பேர் பலி

சிரியாவில் இஸ்ரேல் ஏவுகணைகள் வான்வழி தாக்குதல் நடத்தியதில், ஈரான் புரட்சி படையினர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-04-02 03:49 GMT

தெஹ்ரான்,

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் ஈரான் தூதரகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் மீது, இஸ்ரேல் திடீரென வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த சம்பவத்தில் ஈரானின் ஆயுத படைகளில் ஒன்றான இஸ்லாமிய புரட்சி காவல் படையை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர்.

இதில், மூத்த தளபதிகளான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெஜா ஜகேடி மற்றும் மற்றொரு உயரதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ஹதி ஹாஜி ரகீமி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இதனை ஈரான் அரசும் உறுதி செய்துள்ளது. இதனால், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

எனினும், இஸ்ரேல் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதில், ஈரான் புரட்சி படையினர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர் என்றும் ஈரான் தூதரகத்திற்கு அடுத்துள்ள கட்டிடம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டது என்றும் பிரிட்டனை அடிப்படையாக கொண்ட சிரியாவின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 8 பேர் ஈரானியர்கள். 2 பேர் சிரிய நாட்டினர் மற்றும் லெபனான் நாட்டை சேர்ந்த ஒருவர் ஆவர். அவர்கள் அனைவரும் வீரர்கள் என்றும் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்து உள்ளது. இதனை தொடர்ந்து, இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானும் உறுதி பூண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்