கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வருகிறதா? நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்த நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. இதனால் அந்தத் தொற்று முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2022-08-20 00:26 GMT

ஜெனீவா,

கொரோனா- உலகம் அறிந்த பெயராகி இருக்கிறது, இந்த வைரஸ்.

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றியதாக நம்பப்படுகிற கொரோனா வைரஸ் பெருந்தொற்று, உலக நாடுகளையெல்லாம் வாட்டி வதைத்திருக்கிறது.

ஏறத்தாழ 2½ ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பூமிப்பந்தை, பந்தாடிய கொரோனா வைரஸ், இப்போது அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கிறதா என்று கேட்கிற நிலைக்கு வந்து இருக்கிறது.

இந்தியாவிலும் கொரோனா தனது கடைசிக்கட்டத்தை நெருங்கி விட்டிருக்கிறதா என்று கேட்கிற சூழல் வந்துள்ளது.

ஏறத்தாழ 140 கோடி மக்கள் வாழ்கிற இந்தியாவில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒரு நாளில் 15 ஆயிரத்து 754 பேருக்குத்தான் தொற்று என்பது பாதிப்பே இல்லை என்றே கூறலாம். கர்நாடகம், மராட்டியம், டெல்லி, கேரளா என 4 மாநிலங்களில்தான் தொற்று 4 இலக்க எண்ணிக்கையில் இருக்கிறது. எனவே பயப்பட ஒன்றுமில்லை என கூறுகிற நிலை வந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான மந்தை எதிர்ப்புச்சக்தி பெரும்பாலான மக்களுக்கு வந்திருக்கிறது. இதனால் தொற்று வந்தாலும் 2 அல்லது 3 நாட்கள் ஜலதோஷம் போல போய்விடுகிற சூழலைப் பார்க்க முடிகிறது. ஆஸ்பத்திரி சேர்க்கையும், தீவிர தாக்குதலும் அபூர்வமாகத்தான் இருக்கிறது.

இந்த நிலை இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடுகளிலும் இருக்கிறது.

இதற்கு அஸ்திவாரம் அமைத்துத் தந்த பெருமை கொரோனா தடுப்பூசிகளுக்கு உண்டு. உலகளவில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தடுப்பூசிகளின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டு விட்டார்கள்.

இந்தியாவிலும், அமெரிக்காவிலும் 67 சதவீத மக்கள் 2 தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். சீனாவில் 89 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டு விட்டனர். ஆனாலும் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் இன்னும் பல இடங்களில் தொடர்கின்றன என்பது வேறுகதை.

சீனாவில் 'ஜீரோ கோவிட்' கொள்கையை பின்பற்றுகிறார்கள். இந்தக் கொள்கை, 15 லட்சம் இறப்புகளை அங்கு தவிர்த்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று கூறுகிற நிலை வர வேண்டும் என திட்டமிட்டு செயல்படுகிறார்கள். அதனால்தான் அங்கு ஆங்காங்கே இன்னும் பொது முடக்கம், தீவிர கொரோனா பரிசோதனைகள் நீடிக்கின்றன.

கொரோனாவால் உலகளவில் பெரும்இழப்பினை சந்தித்த அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதித்த ஒருவருடன் வெளிப்பட்டால்கூட, பாதிப்போ, அறிகுறிகளோ தனக்கு நேராதவரையில், தடுப்பூசி போட்டவர்களும் சரி, போடாதவர்களும் சரி தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளத்தேவையில்லை என்று சி.டி.சி. என்று சொல்லப்படுகிற நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறி விட்டது.

அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் கூட 10 நாட்களுக்கு உயர் தரமான முககவசத்தை முறையாக அணிந்து, 5-வது நாளில் பரிசோதனை செய்தால் போதும் என சொல்லப்பட்டு விட்டது.

கொரோனா நோயாளிகள் 5 நாட்கள் மட்டும் வீட்டில் தனிமைப்படுத்தினால் போதும். அறிகுறிகள் போன பின்னே வீட்டிலும் சரி வெளியே பொது இடங்களிலும் சரி உயர் தர முககவசம் அணிந்து வந்தால் போதும் என கூறப்பட்டுள்ளது.

சி.டி.சி.யின் சமீபத்திய அறிவுரை குறிப்பு, கொரோனா முற்றிலுமாய் முடிவுக்கு வந்து விடாவிட்டாலும்கூட, நாடு அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு துணை நிற்கிறது. கொரோனா நமது அன்றாட வாழ்வில் இப்போது பெரிதான இடையூறு செய்வதில்லை என்று கூறி உள்ளது.

2020-ம் ஆண்டு கொரோனா தீவிரமாக பரவத்தொடங்கியபோது, பதறிக்கொண்டே கட்டுப்பாடுகளை விதித்த நாடுகள் இப்போது அந்த கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொண்டிருக்கின்றன என்பது உண்மை.

உலகளாவிய நிர்வாக ஆலோசனை நிறுவனம் மெக்கின்சி கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில், ஐரோப்பாவும், அமெரிக்காவும் கொரோனா தொற்றைப் பொறுத்தமட்டில் உள்ளூர் தொற்று என்ற அளவுக்கு வந்து விட்டன, 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உயிரிழப்புகள் மிகவும் குறைவுதான் என்கிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் வைரஸ் பரவல் கட்டுப்படுத்தல் என்ற நடவடிக்கையில் இருந்து உள்ளூர் தொற்று நிர்வகித்தல் என்ற கட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

மொத்தத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு பெரும்பாலான நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

எனவே கொரோனா தொற்று முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி உரக்க ஒலிக்கிறது என்பதே பொதுச் சுகாதார நிபுணர்களின் பார்வையாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்