கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபரானால் பிரபல பாடகி டெய்லர் ஸ்விப்ட் துணை அதிபரா? உண்மை என்ன...!!

அமெரிக்காவில் 2020-ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலின்போது, பைடன் மற்றும் கமலா ஹாரிசுக்கு ஸ்விப்ட் தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தினார்.

Update: 2024-07-22 08:51 GMT

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இதேபோன்று, ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் முடிவுடன் பைடன் களம் இறங்கினார்.

ஆனால், வயது முதிர்வு, டிரம்புடனான விவாதத்தின்போது திணறல், உள்ளிட்ட சர்ச்சைகளால் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு குரல்கள் எழுந்தன. கட்சியினரின் அதிருப்தி அதிகரித்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்த பைடன், அதற்கான அறிவிப்பையும் நேற்று வெளியிட்டார்.

தொடர்ந்து, கமலா ஹாரிசை அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவித்து தன்னுடைய முழு ஆதரவையும் வெளிப்படுத்தினார். எனினும், 2025-ம் ஆண்டு ஜனவரி வரை அதிபராக தொடர்ந்து பதவியில் நீடிப்பார்.

அமெரிக்காவில் பிரபல பாடகி மற்றும் பாடல் ஆசிரியராக டெய்லர் ஸ்விப்ட் (வயது 34) இருந்து வருகிறார். 2020-ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலின்போது, பைடன் மற்றும் கமலா ஹாரிசுக்கு ஸ்விப்ட் தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தினார்.

எனினும், இந்த முறை எந்த வேட்பாளருக்கும் தன்னுடைய ஆதரவை அவர் தெரிவிக்கவில்லை. இந்த சூழலில், ஸ்விப்டின் ரசிகர்கள் எக்ஸ் சமூக ஊடகத்தில் சில செய்திகளை பரப்பியுள்ளனர்.

அதில், நவம்பரில் வரவுள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க உதவுவதற்காக ஸ்விப்டின் ரசிகர்கள் தயாராக உள்ளனர். இதற்காக ஸ்விப்டின் கூட்டணியும் ரசிகர்களை இயக்க தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, காலியாக உள்ள துணை அதிபர் பதவிக்கு, 2020-ம் ஆண்டில் தனக்கு ஆதரவு தெரிவித்த ஸ்விப்டை கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுப்பார் என்றும் ஒரு தகவல் பரவியது. ஆனால், இதன் உண்மை தன்மை என்னவென்று உறுதிப்படுத்தப்படவில்லை. ஸ்விப்டும் இதுபற்றி எதுவும் கூறவில்லை.

அமெரிக்காவில், வடக்கு கரோலினா மாகாண கவர்னராக ராய் கூப்பர் உள்ளார். அதிபர் தேர்தலில் ஹாரிஸ் வெற்றி பெற்றால், துணை அதிபருக்கான கமலா ஹாரிசின் தேர்வாக கூப்பர் இருப்பார் என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது.

இதேபோன்று, கமலா ஹாரிசுக்கு கூப்பரும் தன்னுடைய ஆதரவை வெளிப்படுத்தி உள்ளார். ஹாரிஸ் அடுத்த அதிபராக வேண்டும். டிரம்பை வீழ்த்தி நம்முடைய நாட்டை ஒன்றிணைத்து வழிநடத்தி செல்வார். அவருக்காக பிரசாரம் செய்ய காத்திருக்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்