இஸ்ரேலில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது டிரோன் தாக்குதல் நடத்திய ஈராக்

இஸ்ரேலின் ஹைபா நகரை குறிவைத்து அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈராக் டிரோன் தாக்குதல் நடத்தியது.

Update: 2024-04-06 23:42 GMT

கோப்புப்படம்  

ஜெருசலேம்,

இஸ்ரேல்-காசா போர் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சிரியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் செயல்படும் கிளர்ச்சியாளர்கள் காசாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக இவர்கள் இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கு இஸ்ரேல் ராணுவமும் உடனடியாக பதிலடி கொடுத்து வருகிறது.

அந்தவகையில் கடந்த வாரம் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ தளபதிகள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என அமெரிக்காவையும் ஈரான் எச்சரித்துள்ளது.

இந்தநிலையில் இஸ்ரேலின் ஹைபா நகரை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த தாக்குதலுக்கு ஈராக்கை தளமாக கொண்டு செயல்படும் கிளர்ச்சியாளர்கள் குழு பொறுப்பேற்றுள்ளது. எனவே ஈராக் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்