ஈரானில் மூத்த ராணுவ அதிகாரி படுகொலை

ஈரானில் மூத்த ராணுவ அதிகாரி படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2022-05-23 20:31 GMT

கோப்புப்படம்

டெஹ்ரான்,

ஈரானின் சக்தி வாய்ந்த ராணுவமான ஈரானிய புரட்சிகர காவல்படையில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்தவர் சயாத் கோடாய். இவர், வெளிநாடுகளில் ஈரானிய புரட்சிகர காவல்படையின் செயல்பாடுகளை மேற்கொள்ளும் குட்ஸ் படையில் முக்கிய உறுப்பினராக பதவி வகித்து வந்தார். அதே சமயம் இவர் பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பதாகவும், மத்திய கிழக்கு முழுவதும் நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பொறுப்பாக இருப்பதாகவும் அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் ராணுவ அதிகாரி சயாத் கோடாய், நேற்று தலைநகர் டெஹ்ரானில் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவரின் காரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் சயாத் கோடாயை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதில் சயாத் கோடாய் காருக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த படுகொலைக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை.

கடந்த 2020-ம் ஆண்டு ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மோசென் பக்ரிசாதே இதுபோன்று தலைநகர் டெஹ்ரானில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிறகு, ஈரானில் நடந்த மிகப்பெரிய பாதுகாப்பு மீறல் இதுவாகும். ஈரானில் மிகவும் அரிதாக நடக்கும் இத்தகைய உயர்மட்ட படுகொலைகளின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஈரானிய அதிகாரிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்