ஈரான்-சவுதி அரேபியா இடையே மீண்டும் தூதரக உறவு

சீனாவில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் மீண்டும் தூதரக உறவை தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.;

Update:2023-03-12 05:41 IST

பீஜிங்,

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் கடந்த 2016-ம் ஆண்டு ஷியா பிரிவு மதகுரு ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு, ஷியா பிரிவினர் அதிகம் வாழும் ஈரான் கடும் கண்டனம் தெரிவித்தது.

மேலும் இதற்கு பழிவாங்கும் விதமாக ஈரானில் உள்ள சவுதி அரேபியா தூதரகங்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இது இருநாடுகள் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இதையடுத்து ஈரானுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வதாக சவுதி அரேபியா அறிவித்தது.

இந்த நிலையில் இருநாடுகள் இடையிலான தூதரக உறவை மீண்டும் புதுப்பிப்பது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாகவே இருதரப்பும் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தன. எனினும் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாறாக அவ்வப்போது இருதரப்புக்கும் இடையில் உரசல் ஏற்பட்டு பேச்சுவார்த்தைகள் பாதியில் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் இந்த இரு நாடுகளுக்கு இடையில் சமரசம் செய்ய சீனா முன்வந்தது. அந்த வகையில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் சீனா, ஈரான் மற்றும் சவுதி அரேபியாவின் வெளியுறவு மந்திரிகள் மட்டத்தில் கடந்த 4 நாட்களாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது.

நேற்று முன்தினம் நடந்த இறுதிகட்ட பேச்சுவார்த்தையின்போது மீண்டும் தூதரக உறவை தொடங்க ஈரான் மற்றும் சவுதி அரேபியா ஒப்புக்கொண்டன. இது தொடர்பான ஒப்பந்தங்களில் 3 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளும் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தத்தில் 2 மாதங்களுக்குள் தூதரகங்களை மீண்டும் திறக்கவும், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உறவுகளை மீண்டும் நிறுவவும் ஈரான் மற்றும் சவுதி அரேபியா உறுதியளித்துள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்