அமிர்தசரசில் இருந்து ஆமதாபாத் சென்ற விமானம் வழிதவறி பாகிஸ்தானுக்குள் நுழைந்ததால் பரபரப்பு
அமிர்தசரசில் இருந்து ஆமதாபாத் சென்ற விமானம் மோசமான வானிலையால் வழிதவறி பாகிஸ்தானுக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
இஸ்லாமாபாத்,
இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் மாலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து குஜராத்தின் ஆமதாபாத் புறப்பட்டது. இந்த விமானம் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகள் வழியாக பறந்து கொண்டிருந்தது.
அப்போது அந்த பகுதியில் மோசமான வானிலை நிலவியது. பாகிஸ்தானின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இது இந்திய எல்லையை ஒட்டிய பகுதிளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
வழிதவறி நுழைந்தது
இவ்வாறு மோசமான வானிலை நிலவியதால் இண்டிகோ விமானம் திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பில் இருந்து விலகி வழிதவறி பாகிஸ்தான் வான்பகுதிக்குள் நுழைந்தது.
பின்னர் லாகூருக்கு அருகே உள்ள குஜ்ரன்வாலா பகுதிக்கு சென்றது. இரவு 7.30 மணி அளவில் லாகூருக்கு வடக்கே பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்த விமானம் பின்னர் 8.01 மணி அளவில் மீண்டும் இந்திய வான்பகுதிக்குள் நுழைந்தது.
சுமார் ½ மணி நேரம் பாகிஸ்தான் வான்பகுதிக்குள் பயணித்தாலும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி இந்திய பகுதிக்குள் அது திரும்பியது. இந்த விவகாரம் விமான நிலைய வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக இண்டிகோ விமான நிறுவனம் தரப்பில் இருந்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
இயல்பான நிகழ்வுதான்
எனினும் இது வழக்கத்துக்கு மாறானதல்ல எனவும், மோசமான வானிலை காலங்களில் இது இயல்பானதுதான் எனவும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்டதும் கூட என்றும் அவர் கூறினார்.
முன்னதாக கடந்த மே 4-ந் தேதி மஸ்கட்டில் இருந்து லாகூர் வந்து கொண்டிருந்த பாகிஸ்தான் விமானம் ஒன்று அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக வழிதவறி இந்திய பகுதிக்குள் நுழைந்தது எனவும், 10 நிமிடங்களுக்கு பின்னரே மீண்டும் பாகிஸ்தானுக்குள் நுழைந்தது எனவும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக லாகூருக்கு வரவேண்டிய பல விமானங்கள் இஸ்லாமாபாத்துக்கு திருப்பிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.