பாகிஸ்தானின் நிலைமை குறித்து இந்திய தொலைக்காட்சிகள் கேலி செய்கின்றன: இம்ரான் கான்
பாகிஸ்தானின் தற்போதைய நிலைமை குறித்து இந்திய தொலைக்காட்சிகள் கேலி செய்வதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்,
நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில், பிரதமராக இருந்தபோது கிடைத்த பரிசு பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் முறைகேடாக விற்ற வழக்கில் லாகூர் ஐகோர்ட்டு இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்டை கடந்த மாத இறுதியில் பிறப்பித்தது. அதை தொடர்ந்து இம்ரான்கானை கைது செய்ய லாகூரில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது அவர் தலைமறைவானார். எனினும் அதன் பின்னர் தொலைக்காட்சி வாயிலாக தொண்டர்களுக்கு உரையாற்றிய இம்ரான்கான் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதைத்தொடர்ந்து பலுசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் உள்ள போலீஸ் நிலையத்தில், அரசுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக இம்ரான்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனையடுத்து, இந்த வழக்கில் குவெட்டா நகர கோர்ட்டு இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்தது. அதனை எதிர்த்து இம்ரான்கான் தரப்பில் பலூசிஸ்தான் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று இந்த மனுவை விசாரித்த பலுசிஸ்தான் ஐகோர்ட்டு இம்ரான்கானுக்கு எதிரான பிடிவாரண்டை ரத்துசெய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் பாகிஸ்தானின் நிலைமை குறித்து இந்திய தொலைக்காட்சிகள் கேலி செய்வதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கூட்டம் ஒன்றில் பேசிய அவர், "தற்போதைய தலைவர்கள் பாகிஸ்தானிலும் வெளிநாட்டிலும் பெரும் சொத்துக்களைக் கொண்டுள்ளனர். அவர்கள் பாகிஸ்தான் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. பாகிஸ்தானில் சட்டத்தின் ஆட்சி இல்லை.
அவர்கள் நாட்டை நடத்தும் விதத்தில், உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் எதிர்காலம் இல்லை. இந்தியாவின் தொலைக்காட்சி சேனல்களைப் பாருங்கள். பாகிஸ்தானின் நிலையை எப்படி கேலி செய்கிறார்கள். பாகிஸ்தான் அழிவை நோக்கி நகர்கிறது என்று அவர்கள் (இந்திய சேனல்கள்) மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறார்கள்" என்று இம்ரான் கான் கூறினார்.
மேலும் சுதந்திரத்தின் போது, பாகிஸ்தானை வாழ முடியாது என்றும், விரைவில் இந்தியாவுடன் மீண்டும் இணையும் என்றும் இந்தியர்கள் கேலி செய்ததாகவும் அவர் கூறினார்.