வெள்ளை மாளிகை மீதான தாக்குதல் வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியர்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது வாடகை டிரக்கை மோதச் செய்து தாக்குதல் நடத்திய இந்தியர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து ஆகஸ்ட் 23-ம் தேதி அவருக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது.;

Update:2024-05-14 17:04 IST

வாஷிங்டன்:

அமெரிக்காவின் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையை குறிவைத்து கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு மே 22-ம் தேதி இரவு வெள்ளை மாளிகை நோக்கி வேகமாக வந்த டிரக், எச் வீதி, வடமேற்கு மற்றும் 16-வது தெரு சந்திப்பில் வெள்ளை மாளிகை மற்றும் ஜனாதிபதி பூங்காவை சுற்றியுள்ள பாதுகாப்பு தடுப்புகள் மீது மோதியது.

பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த உலோகத் தடுப்புகள் மீது ஒருமுறை மோதிய பிறகு, அந்த டிரக் ரிவர்சில் வந்து மீண்டும் தடுப்புகள் மீது மோதியது. இதனால் டிரக்கின் என்ஜின் ஆப் ஆகிவிட்டது. அதிலிருந்து புகை வெளியேறியது, ஆயிலும் கசிந்தது. அந்த டிரக்கில் இருந்து வெளியேறிய நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். முதலில் இது விபத்து என்றே போலீசார் கருதினர். ஆனால் ஒருமுறை மோதியபின் ரிவர்ஸ் வந்து மீண்டும் மோதியதாலும், அந்த நபரிடம் ஹிட்லரின் நாஜி கொடி இருந்ததாலும் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

விசாரணையில் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த சாய் வர்ஷித் கந்துலா என்பது தெரியவந்தது. வெள்ளை மாளிகையில் நுழைந்து அதிகாரத்தை கைப்பற்றி, நாட்டின் தலைவராக தன்னை அறிவித்துக் கொள்வதே தனது திட்டம் என்று கந்துலா தெரிவித்துள்ளார். தனது இலக்கை அடைய தேவைப்பட்டால் அமெரிக்க அதிபர் மற்றும் பிறரை கொல்லவும் தயங்கமாட்டேன் என்றும் விசாரணையின்போது கந்துலா கூறியுள்ளார்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிசிலிருந்து டல்லஸ் நகருக்கு விமானம் மூலம் வந்த கந்துலா, அங்கு டிரக்கை வாடகைக்கு எடுத்துள்ளார். அதை வைத்து வெள்ளை மாளிகை தாக்குதலை நடத்தியது விசாரணையில் தெரியவந்தது.

கந்துலா மீதான வழக்கு விசாரணை அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நேற்றுடன் நிறைவடைந்தன. குற்றம்சாட்டப்பட்ட கந்துலா (வயது 20), தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். நாஜி ஜெர்மனியின் சித்தாந்தம் கொண்ட ஒரு சர்வாதிகாரத்துடன் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மாற்றும் நோக்கத்தில் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கந்துலாவுக்கான தண்டனை தொடர்பாக ஆகஸ்ட் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்