இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 7 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. 18 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.

Update: 2023-11-12 11:57 GMT

Photo Credit :AFP

ஜெனீவா,

பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலின் உச்சமாக கடந்த மாதம் 7 ஆம் தேதி, காசா முனையில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலால் கடும் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை அடியோடு ஒழித்து கட்டுவோம் என சூளுரையுடன் காசா மீது தாக்குதல் தொடுத்துள்ளது. காசா மீது தரைவழியாகவும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது. ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான போரால் காசாவில் 11 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகினர்.

இஸ்ரேலில் 1,200 பேர் பலியாகினர். பல்லாயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். காசா நகரை சுற்றி வளைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், காசாவில் மனிதாபிமான நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கும் மக்கள் அல்லல்படும் சூழல் உள்ளது. ஆனால், இஸ்ரேல் ராணுவம் முழு வீச்சில் தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி தாக்குதல்களுக்கு மத்தியில் தரைவழியாகவும் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலால் காசா முற்றிலும் நிலைகுலைந்து இருக்கிறது.

காசாவை ஆக்கிரமிக்கும் திட்டம் தங்களிடம் இல்லை என்று கூறும் இஸ்ரேல்,  காசாவிற்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை கொடுக்க நினைக்கிறோம்" என்று கூறிவருகிறது. இந்த நிலையில், ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பகுதிகளில் குடியேற்றங்களை ஏற்படுத்தும் இஸ்ரேலின் செயல்பாடுகளை கண்டித்து ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 7 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. 18 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. இஸ்ரேல் மற்றும் காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என்று அண்மையில் ஐக்கிய நாடுகள் அவையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்து இருந்த நிலையில், தற்போது இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்