இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே சிறந்த ராணுவ உறவு உள்ளது: பென்டகன்
அமெரிக்காவின் ராணுவ தலைமை தளபதியான ஜெனரல் ராண்டி ஜார்ஜ் உடன் இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே உயர்மட்ட ஆலோசனைகளை மேற்கொள்வார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் பென்டகன் மையத்தின் ஊடக துணை செயலாளரான சபரீனா சிங் கூறும்போது, நாங்கள் இந்தியாவுடன் ஒரு சிறந்த ராணுவ உறவையும் மற்றும் நல்ல முறையிலான தொடர்புகளையும் கொண்டிருக்கிறோம். நாங்கள் இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என தொடர்ந்து கண்காணிக்க இருக்கிறோம்.
ஆனால், அதுபற்றிய முன்னேற்றத்திற்குரிய தகவல்கள் எதனையும் பகிர்வதற்கான அதிக விவரங்கள் எதுவும் என்னிடம் இல்லை என்று கூறினார். பாகிஸ்தான் தேர்தல் சூழல்களை பற்றிய அமெரிக்காவின் கண்காணிப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சபரீனா, பாகிஸ்தான் தேர்தல் விசயத்தில் என்ன நடக்கிறது என நாங்கள் நிச்சயம் கவனித்து வருகிறோம்.
ஆனால், அதுபற்றிய கூடுதல் விவரங்களை நீங்கள் தெரிவிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்று கூறினார். இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே அமெரிக்காவுக்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதற்காக அவர் அமெரிக்காவுக்கு நேற்று புறப்பட்டு சென்ற நிலையில், இரு நாடுகளின் ராணுவ உறவுகள் பற்றி சபரீனா கூறியுள்ளார். இந்திய தளபதியின் இந்த பயணத்தின்போது, அமெரிக்காவின் ராணுவ தலைமை தளபதியான ஜெனரல் ராண்டி ஜார்ஜ் உடன் உயர்மட்ட ஆலோசனைகளை மேற்கொள்வார்.
அதனுடன் பிற மூத்த ராணுவ அதிகாரிகளுடனும் உரையாடுவார் என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.