இம்ரான்கான் கட்சிக்கு கிரிக்கெட் மட்டை சின்னம் இல்லை: உறுதி செய்த கோர்ட்டு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கட்சியின் சின்னமான கிரிக்கெட் மட்டை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி இருந்தது.

Update: 2024-01-04 20:56 GMT

கோப்புப்படம்

லாகூர்,

பாகிஸ்தானில் அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சி போட்டியிடுகிறது.

கட்சியின் தலைவரான இம்ரான்கான் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான உட்கட்சி தேர்தல் கடந்த மாதம் நடந்தது. இதில் கட்சியின் புதிய தலைவராக பாரிஸ்டர் கோஹர் கான் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, உட்கட்சி தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்று கூறி, கட்சியின் சின்னமான கிரிக்கெட் மட்டை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து பாகிஸ்தான்-தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சி லாகூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நேற்று லாகூர் ஐகோர்ட்டில் நீதிபதி ஜவாத் ஹாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த வழக்கு ஏற்புடையது அல்ல என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதன் மூலம் இம்ரான்கான் கட்சிக்கு கிரிக்கெட் மட்டை சின்னம் ரத்து செய்யப்பட்ட தேர்தல் ஆணையத்தின் உத்தரவை கோர்ட்டு உறுதி செய்துள்ளது. இது நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே இதுதொடர்பாக பாகிஸ்தான் தெஹ்ரீப்-இ-இன்சாப் தலைவர் கோஹர் கான் கூறும்போது, "எங்கள் தேர்தல் சின்னத்தை திரும்பப் பெற நாங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளோம், எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்