'பொய்யான வாக்குறுதியால் வெல்வதைவிட நான் தோற்பேன்' - ரிஷி சுனாக் பரபரப்பு பேட்டி
பொய்யான வாக்குறுதியால் வெல்வதைவிட தான் தோற்பேன் என்று ரிஷி சுனாக் தெரிவித்தார்.
லண்டன்,
இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளி ரிஷி சுனாக் உள்ளார். இவர் பி.பி.சி.க்கு ஒரு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- நான் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவிக்கான (பிரதமர் பதவி) போட்டியில், பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெறுவதைக்காட்டிலும் தோற்பேன். மிகக் கடினமான குளிர்காலத்தில் இந்த நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்று நான் உறுதியாக இருக்கிறேன். எனது முதல் விருப்பம் எப்போதும் மக்களிடம் இருந்து பணத்தை எடுக்கக் கூடாது என்பதுதான்.
வாழ்வாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு உதவுவதில் நான் உறுதியுடன் உள்ளேன். குளிர் காலத்தில் கூடுதல் உதவிகள் வழங்குவதற்கான தார்மீகப்பொறுப்பை உணர்கிறேன். (கொரோனா பொது முடக்க காலத்தில்) என் சாதனையை வைத்து மக்கள் முடிவுக்கு வரட்டும்.
கோடிக்கணக்கான மக்கள் விலைவாசி உயர்வால் கவலைப்படுவதை அறிந்துள்ளேன். குறிப்பாக அவர்களது எரிசக்தி கட்டணம் உயர்ந்திருப்பதை அறிந்திருக்கிறேன். நான் சொன்னது என்னவென்றால், நான் பிரதமர் பதவிக்கு வந்தால், இந்த ஆண்டு தொடக்கத்தில் நான் அந்த நடவடிக்கைகளை அறிவித்ததைவிட நிலைமை மோசமாக இருப்பதால், மிகவும் ஆதரவு தேவைப்படுகிற குடும்பங்களுக்கு உதவுவதில் முன்னேறுவேன் என்பதுதான். இவ்வாறு அவர் கூறினார்.