ஒரே பாலின ஜோடிகளுக்கு மாற்று சட்ட கட்டமைப்பு.. ஹாங்காங் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்
ஹாங்காங் நாட்டில் வெளிநாட்டு ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஹாங்காங் நாட்டைச் சேர்ந்தவர் ஜிம்மி ஷாம் (வயது 36). ஜனநாயகம் மற்றும் LGBTQ உரிமை ஆர்வலரான இவர் தனது ஓரினச் சேர்க்கை பார்ட்னரை 2013ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திருமணம் செய்துகொண்டார். அதன்பின்னர் தனது திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடினார். 2018ல் கீழ் நீதிமன்றங்களில் இரண்டு முறை வழக்கில் தோல்வியடைந்தார்.
அதன்பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஷாமின் மேல்முறையீட்டுக்கு ஓரளவு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆனால் ஓரின சேர்க்கையாளர்களின் அடிப்படை சமூக தேவைகளை பூர்த்தி செய்வதற்காக புதிய விதிமுறைகளை வகுத்து மாற்று சட்ட கட்டமைப்பை உருவாக்கும்படி அரசாங்கத்தை வலியுறுத்தியது. இதற்காக அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளித்தது.
ஷாம் ஐந்து ஆண்டுகளாக நடத்திய சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்து, ஒரே பாலின திருமணம் தொடர்பான விஷயத்தில் நீதிமன்றம் நேரடியாக கருத்து கூறியது இதுவே முதல் முறை ஆகும்.
ஹாங்காங் அரசு வரும் நவம்பர் மாதம், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான முதல் ஆசிய விளையாட்டு போட்டியை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.