பிரேசிலில் கனமழை: பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு
பிரேசில் நாட்டில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்து உள்ளது.
ரியோ டி ஜெனீரோ,
பிரேசில் நாட்டில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்து உள்ளது.
பிரேசில் நாட்டில் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதேபோன்று, கனமழையால் நில சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன.
வெள்ளம் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளநீரில் மூழ்கின. வெள்ளத்திற்கு அலகோவாஸ், பெர்னாம்புகோ ஆகிய மாகாணங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. கனமழையால் வெள்ளம் மற்றும் நில சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன.
அந்நாட்டின் வடகிழக்கே அமைந்த பெர்னாம்புகோ மாகாணத்தின் தலைநகர் ரீசிப் கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்நகரில் மொத்தம் 128 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.
வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்பு குழுவினர், ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
பெர்னாம்புகோ மாகாணத்தின் 34 நகராட்சி பகுதிகளுக்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என மாகாண கவர்னர் பவுலோ கமரா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
கனமழையால் உயிரிழந்தோர், அனைத்து சொத்துகளையும் இழந்தோர் மற்றும் புலம்பெயர்ந்த அனைவருக்கும் அரசு நஷ்ட ஈடு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.