வெளிநாட்டினர் உள்பட 17 பணய கைதிகளை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு

அவர்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Update: 2023-11-26 01:54 GMT

டெல் அவிவ்,

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், பணய கைதிகளை பேச்சுவார்த்தை வழியே விடுவிக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டது. இரு தரப்பினர் இடையே 4 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, எகிப்தின் ரபா எல்லை பகுதியில் இஸ்ரேலிய பணய கைதிகள் 13 பேர் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டனர்.

இஸ்ரேலிய பணய கைதிகளில் பலர் அந்நாட்டின் கிப்புஜ் பியரி பகுதியில் இருந்து கடத்தப்பட்டவர்கள் என நம்பப்படுகிறது. இந்நிலையில், பணய கைதிகள் 17 பேர் அடங்கிய 2-வது குழுவினரை ஹமாஸ் அமைப்பு விடுவித்து உள்ளது.

அவர்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறும்போது, அவர்களில் 13 பேர் இஸ்ரேல் நாட்டின் குடிமக்கள் மற்றும் 4 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர் என தெரிவித்தது.

அவர்கள் கெரம் ஷாலோம் எல்லை பகுதிக்கு கொண்டு செல்லப்படுவார்கள். அவர்களின் பெயர் பட்டியலை இஸ்ரேல் அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். இதுபற்றிய விவரம் அவர்களுடைய குடும்பத்தினருக்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.

இதற்கு முன், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 13 பேர் மற்றும் வெளிநாட்டினர் 7 பேர் என மொத்தம் 20 பணய கைதிகள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர் என ஹமாஸ் அமைப்பு தெரிவித்து இருந்தது என்று தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்