பணய கைதிகளை பற்றி விரைவில் நல்ல செய்தி வரும்: நெதன்யாகு தகவல்

போர்நிறுத்தத்திற்கான முதல் ஒப்பந்தம் மற்றும் இரு தரப்பிலும் பெரிய அளவில் கைதிகளை விடுவிப்பது என்பது இறுதி நிலையில் உள்ளது.

Update: 2023-11-21 16:34 GMT

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த போரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தளபதிகள் 3 பேர் ஒரே நாள் இரவில் சுட்டு வீழ்த்தப்பட்டனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்தது.

இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இஸ்மாயில் ஹனியே வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இஸ்ரேலுடன் ஹமாஸ் அதிகாரிகள் போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் நெருங்கியிருக்கிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறும்போது, நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம். இந்த தருணத்தில், நிறைய கூறுவது சரியாக இருக்காது. விரைவில் நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறினார்.

பணய கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் முன்னேற்றத்திற்கான விசயங்கள் பற்றி நெதன்யாகு, அவருடைய மந்திரி சபையுடன் பேசி முடிவு செய்வார் என அவருடைய அலுவலகம் தெரிவித்து உள்ளது.

போர்நிறுத்தத்திற்கான முதல் ஒப்பந்தம் மற்றும் இரு தரப்பிலும் பெரிய அளவில் கைதிகளை விடுவிப்பது என்பது இறுதி நிலையில் உள்ளது என்றும் அதுபற்றிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்