அமெரிக்காவில் பயங்கரம்: ஓரின சேர்க்கையாளர் கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி
அமெரிக்காவில் ஓரின சேர்க்கையாளர்களின் கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.;
வாஷிங்டன்,
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள கொலராடோ ஸ்பிரிங்ஸ் நகரில் ஓரின சேர்க்கையாளர்களுக்கான கேளிக்கை விடுதி ஒன்று உள்ளது.
நேற்று முன்தினம் இந்த கேளிக்கை விடுதியில் வழக்கம் போல் ஏராளமான ஓரின சேர்க்கையாளர்கள் திரண்டு மது, ஆடல், பாடல் என மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.
இது ஒருபுறமிருக்க சர்வதேச திருநங்கைகள் நினைவு நாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் கேளிக்கை விடுதியில் நடந்து வந்தன.
இதனால் கேளிக்கை விடுதி மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென கேளிக்கை விடுதியில் இருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கேளிக்கை விடுதியில் இருந்த அனைவரும் உயிர் பயத்தில் அலறியடித்தபடி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் அந்த மர்ம நபர் துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருந்தார்.
இதில் 30-க்கும் மேற்பட்டோரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.
இதையடுத்து வாடிக்கையாளர்களில் ஒருவர் மிகவும் தைரியமாக தாக்குதல் நடத்திய நபரை எதிர்கொண்டு அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்தார். பின்னர் அதே துப்பாக்கியால் அவரை தாக்கி தரையில் வீழ்த்தினார்.
அதை தொடர்ந்து மற்றொரு வாடிக்கையாளர் தரையில் விழுந்த மர்ம நபரை நகர விடமால் பிடித்து வைத்தார்.
போலீசார் வெகுவாக பாராட்டு
இதற்கிடையில் இந்த துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களில் போலீசார் அந்த கேளிக்கை விடுதிக்கு விரைந்தனர்.
அவர்கள் வாடிக்கையாளர்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த மர்ம நபரை கைது செய்தனர். பின்னர் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
தங்களின் உயிரைப் பற்றி கவலை படாமல் மிகவும் தையரித்துடன் தாக்குதல் நடத்திய நபரை மடக்கிப்பிடித்த வாடிக்கையாளர்கள் 2 பேரையும் போலீசார் வெகுவாக பாராட்டினர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்
அவர்களின் இந்த வீரச்செயல் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படாமல் தடுத்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், கொலராடோ ஸ்பிரிங்ஸ் நகர மேயர், மாகாண கவர்னர் மற்றும் சம்பவம் நடந்த கேளிக்கை விடுதியின் உரிமையாளர் உள்பட பலரும் அந்த வாடிக்கையாளர்கள் 2 பேருக்கும் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட அந்த நபர் 22 வயதான ஆண்டர்சன் லீ ஆல்ட்ரிச் என்பது தெரிய வந்துள்ளதாகவும், ஏற்கனவே கடந்த ஆண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தில் இவர் போலீசாரின் கவனத்துக்கு வந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜோ பைடன் கண்டனம்
இந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணி குறித்து அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்கர்கள் வெறுப்பை சகித்துக் கொள்ளக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஆர்லாண்டோ நகரில் உள்ள ஓரின சேர்க்கையாளர்களின் கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் பலியானதும், அன்றைய நாளில் அது அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான துப்பாக்கிச்சூடு சம்பவமாக அமைந்ததும் நினைவு கூரத்தக்கது.