பேச்சு சுதந்திரம்... சுவீடனில் குரான் எரிப்பு போராட்டத்திற்கு அனுமதி

சுவீடனில் பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் மசூதிக்கு வெளியே குரான் எரிப்பு போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-06-28 12:58 GMT

ஸ்டாக்ஹோம்,

சுவீடன் நாட்டில் இஸ்லாம் மற்றும் குர்தீஷ் இன மக்களின் உரிமைகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்நாட்டில், ஹார்டு லைன் என்ற அரசியல் கட்சியை சேர்ந்த தலைவரான ரஸ்மஸ் பலூடன் என்பவர் ஸ்டாக்ஹோம் நகரில் துருக்கி தூதரகம் அருகே கடந்த ஜனவரியில், குரான் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் குவைத் உள்ளிட்ட பல அரபு நாடுகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தன.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஜனவரி இறுதியில், நேட்டோவில் சுவீடன் இணைவதற்காக நடத்தப்பட இருந்த பேச்சுவார்த்தையை துருக்கி ரத்து செய்தது. சுவீடன் நேட்டோவில் இணைவதற்கான ஆதரவை வழங்க கூடிய நாடுகளில் ஒன்றாக துருக்கியும் உள்ளது.

இந்த நிலையில், சுவீடனில் ஸ்டாக்ஹோம் நகரில் மசூதி ஒன்றின் வெளியே குரான் எரிப்பு போராட்டம் நடத்த வேண்டும் என்ற நபர் ஒருவரின் கோரிக்கைக்கு அந்நாட்டு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதுபோன்ற பல விண்ணப்பங்கள் வந்தபோதும், அவற்றை போலீசார் அனுமதிக்கவில்லை. ஆனால், சுவீடனின் நீதிமன்றங்கள் இந்த முடிவை தள்ளுபடி செய்தன. மக்களுக்கான பாதுகாக்கப்பட்ட பேச்சு சுதந்திர உரிமையில் தலையிடுகிறீர்கள் என கூறியுள்ளன.

இதனை தொடர்ந்து, போலீசார் கூறும்போது, வெளியுறவு கொள்கையில் பின்விளைவுகளை இது ஏற்படுத்தும் என்றும் குரான் எரிப்பால் ஏற்படும் பாதுகாப்பு ஆபத்துகள் மற்றும் தொடர் விளைவுகள் ஆகியவற்றை முன்னிட்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்தது.

எனினும், இன்று சிறிய அளவில் போராட்டத்தில் ஈடுபட அனுமதி அளிக்கப்படுகிறது. இதில், 2 பேர் மட்டுமே ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்து உள்ளது.

அவர்களில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான சல்வான் மோமிகாவும் ஒருவர் ஆவார். குரானுக்கு தடை கோரிய அவர், ஈராக் நாட்டு அகதி என்று தன்னை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். எனினும், இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பலூடன் பங்கேற்கமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்