பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் திடீர் கைது - நாடு முழுவதும் பதற்றம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை ராணுவம் திடீர் என கைது செய்தது. அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தால் நாடு முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

Update: 2023-05-09 22:43 GMT

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரராக இருந்து 'பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப்' என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, 2018-ல் ஆட்சியைப் பிடித்து அதிர வைத்தவர், இம்ரான்கான் (வயது 70).

ஆனால் கிரிக்கெட்டைப் போன்று அரசியல்களம் அவருக்கு தொடர்ந்து வெற்றியைத் தரவில்லை.

அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டன; இதுவரை இல்லாதவகையில், அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றின. இதனால் கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ந்தேதி அவரது பதவி பறிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது சோதனைக்காலம் தொடங்கியது. அவர் மீது பயங்கரவாதம், மத நிந்தனை, கொலை, வன்முறை, வன்முறையைத் தூண்டுதல் என 140-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின.

ராணுவம் மீது குற்றச்சாட்டு

இம்ரான்கான், ராணுவம் தன்னை கொலை செய்ய சதி செய்துள்ளதாகவும், இதில் பாகிஸ்தான் உளவு அமைப்பின் (ஐ.எஸ்.ஐ.) உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் பைசல் நசீருக்கு தொடர்பு இருப்பதாகவும் நேற்று முன்தினம் கூறி அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

ஆனால் இதை அடிப்படையற்ற குற்றச்சாட்டு என கூறி பாகிஸ்தான் ராணுவம் திட்டவட்டமாக மறுத்தது.

குண்டுக்கட்டாக...

இந்த நிலையில், இம்ரான்கான் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக லாகூரில் இருந்து நேற்று இஸ்லாமாபாத் ஐகோர்ட்டுக்கு வந்தார். அங்கு அவர் தனது வருகையைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த துணை ராணுவத்தினர் அவரை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.

கோர்ட்டில் கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து துணை ராணுவத்தினர் இம்ரான்கானை கைது செய்ததாக அவரது கட்சியின் மூத்த தலைவர் ஷிரீன் மஜாரி தெரிவித்தார். இம்ரான்கானின் சட்டை காலரைப் பிடித்து இழுத்து, குண்டுக்கட்டாக தூக்கி சிறை வாகனத்தில் போட்டதைக் காட்டும் காட்சிகள் டி.வி. சேனல்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

எங்கே அவர்?

கைது செய்யப்பட்ட இம்ரான்கான், ராவல்பிண்டியில் உள்ள ஊழல் தடுப்பு போலீஸ் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

ஆனால் அவரை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக அவரது கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பவாத் சவுத்ரி கூறினார்.

கைதுக்கு முன்பே வீடியோ

இம்ரான்கான் கைது நடவடிக்கையை எதிர்பார்த்து, கைது செய்யப்படுவதற்கு முன்பாக பதிவுசெய்த ஒரு வீடியோ, அவரது கைதைத் தொடர்ந்து வெளியானது.

அந்த வீடியோவில் அவர், "இந்த வார்த்தைகள் உங்களுக்கு வந்துசேரும்போது, ஆதாரம் இல்லாத வழக்கில் நான் கைது செய்யப்பட்டிருப்பேன். இது பாகிஸ்தானில் அடிப்படை உரிமைகளும், ஜனநாயகமும் புதைக்கப்பட்டு விட்டன என்பதைக் காட்டும்" என கூறி உள்ளார்.

சித்ரவதையா?

கைது செய்யப்பட்டதையடுத்து இம்ரான்கான் சித்ரவதை செய்யப்படுவதாக அவரது கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர். அவரது தலையிலும், காலிலும் தாக்கியதாக அவரது வக்கீல் கோஹர்கான் கூறினார்.

இதை பாகிஸ்தான் உள்துறை மந்திரி ராணா சனவுல்லா மறுத்தார். அவர் இதையொட்டிக்கூறும்போது, "அல்காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் இம்ரான்கானை ஊழல் தடுப்பு போலீஸ் படையினர் கைது செய்துள்ளனர். அவருக்கு எதிராக 12-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது. அவரை சித்ரவதை செய்யவில்லை. இங்கிலாந்தில் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபருக்கு சொந்தமான ரூ.7,000 கோடி பிடிப்பட்டது. இந்தப்பணம் சட்டப்படி நாட்டு மக்களுக்கு சொந்தமானது. மீண்டும் மீண்டும் சம்மன் அனுப்பியும் இம்ரான்கான் கோர்ட்டில் ஆஜராகவில்லை. நாட்டின் கருவூலத்துக்கு இழப்புகளை ஏற்படுத்தியதாக ஊழல் தடுப்பு போலீசாரால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டார்.

கோர்ட்டு விசாரணை

இம்ரான்கான் கைது செய்யப்பட்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தி, அது தொடர்பாக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு விசாரணை நடத்தியது. இஸ்லாமாபாத் போலீஸ் ஐ.ஜி., உள்துறை செயலாளர், கூடுதல் அட்டார்னி ஜெனரல் ஆகியோர் 15 நிமிடங்களில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று தலைமை நீதிபதி அமீர் பரூக் உத்தரவிட்டார்.

அவர்கள் 45 நிமிடங்களுக்கு பின்னர் கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது தலைமை நீதிபதி அவர்கள் தாமதமாக வந்ததற்கு தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

சட்டத்தை மீறியதா?

தொடர்ந்து போலீஸ் ஐ.ஜி.நசீர், "இம்ரான்கான் கைது செய்யப்பட்டதை நான் ஊடகம் வாயிலாகத்தான் தெரிந்துகொண்டேன். அவர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்" என தெரிவித்தார்.

அதற்கு தலைமை நீதிபதி அமீர் பரூக், "ஆனால் எனக்கு தெரிந்ததும், கோர்ட்டு ஊழியர் கூறியதும், இம்ரான் கான் ஊழல் தடுப்பு போலீசாரால் கைது செய்யப்படவில்லை என்பதுதான். அவரது கைது சட்டத்தை மீறியது என்றால் இது தொடர்பாக நான் உரிய உத்தரவு பிறப்பிப்பேன்" என கூறினார்.

இம்ரான்கான் வக்கீல் கோஹர்கான், "இம்ரான்கான் பயோமெட்ரிக் அறைக்குள் (வருகையை பதிவு செய்ய) நுழையும்போதே கைது செய்ய முற்பட்டனர். துணை ராணுவத்தினர் ஜன்னல்களை உடைத்தனர். மிளகுப்பொடியை தூவினர். இரும்புத்தடியால் இம்ரான்கானை தாக்கினர். எல்லாவற்றையும் நான் நேரில் பார்த்தேன். அவரது காயப்பட்ட காலிலும் தாக்கினர். அவர்கள் நீதித்துறை சுதந்திரத்தையும், அடிப்படை உரிமைகளையும் மீறினர்" என்றார்.

கண்டனம்

விசாரணையின்போது ஒரு கட்டத்தில் தலைமை நீதிபதி அமீர் பரூக், "என் பொறுமையை சோதிக்காதீர்கள். ஊழல் தடுப்பு போலீசார் கைது நடவடிக்கையை இப்படிச் செய்வார்கள் என்பது எனக்கு தெரியாது. இது நீதித்துறை சுதந்திரம் மீதான தாக்குதல் இல்லையா? இந்த கைது நடவடிக்கை சட்டமீறல் இல்லையா? வக்கீல்கள் தாக்கப்பட்டுள்ளனர். என் கோர்ட்டு தாக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

ஐகோர்ட்டு வளாகத்தில் இம்ரான்கானைக் கைது செய்ததற்கு தலைமை நீதிபதி அமீர் பரூக் தனது கடும் கண்டனத்தையும் பதிவு செய்தார். தொடர்ந்து அவர், "கோர்ட்டு ஜன்னல்கள், கதவுகள் சேதப்படுத்தப்பட்டது முக்கியம் இல்லை. இந்த கோர்ட்டு கட்டிடத்தின் கண்ணியம் பாதிக்கப்பட்டிருப்பதுதான் முக்கியம்" என கூறிக் கண்டித்தார்.

நாடு முழுவதும் பதற்றம்

இம்ரான்கான் கைதைக் கண்டித்து இஸ்லாமாபாத்தில் 144-வது பிரிவின்கீழ் தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

நாடெங்கும் பல்வேறு நகரங்களில் அவரது ஆதரவாளர்கள் வன்முறைப் போராட்டங்களில் இறங்கினர். கராச்சி, பெஷாவர், லாகூர் என பல நகரங்களிலும் இம்ரான்கான் கட்சித்தொண்டர்கள் படையெடுத்து போராட்டங்களில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன. போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வெடித்தனர்.

இதன் காரணமாக பாகிஸ்தானில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்