சந்திரயான்-3 வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் மந்திரி

லட்சியங்கள் நிறைந்த இளம் தலைமுறையால் மட்டுமே உலகத்தை மாற்ற முடியும் என்று ஃபவாத் சவுத்ரி ஹுசைன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-23 15:16 GMT

Image Courtesy : AFP

இஸ்லாமாபாத்,

நிலவின் தென் துருவத்தில், இதுவரை யாரும் ஆய்வு செய்யாத இடத்தில் தடம் பதிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு, கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுவட்டப்பாதையை சென்றடைந்தது.

தொடர்ந்து நிலவு வட்டப்பாதையில் சுற்றி கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டர் கருவி வெளியே கொண்டுவரப்பட்டு, அதே வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டே நிலவை நெருங்கி சென்றது. நிலவை தொட்டுவிடும் தூரத்தில் லேண்டர் கருவி சுற்றி வந்தது.

இன்று மாலை 5.46 மணியளவில் விக்ரம் லேண்டரை நிலவின் தரை பகுதியில் இறக்கும் கட்டம் தொடங்கியது. படிப்படியாக ஒவ்வொரு நிலைகளையும் கடந்து, நிலவில் மெதுவாக விக்ரம் லேண்டர் தரையிறங்கியது. இதன்மூலம் விண்வெளி துறையில் இந்தியா வல்லரசாகி உள்ளது.

இந்த நிலையில் சந்திரயான்-3 வெற்றிக்கு பாகிஸ்தான் முன்னாள் மந்திரி ஃபவாத் சவுத்ரி ஹுசைன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது இஸ்ரோவிற்கு மிகவும் அருமையான தருணம். இந்த வெற்றியை இஸ்ரோ தலைவர் சோம்நாத் மற்றும் பல இளம் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடியதை பார்த்தேன். லட்சியங்கள் நிறைந்த இளம் தலைமுறையால் மட்டுமே உலகத்தை மாற்ற முடியும். வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்