ஈரானுக்கு 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் மூலம் இணையவசதி - எலான் மஸ்க் அறிவிப்பு
ஈரானுக்கு 'ஸ்டார்லிங்க்' இணையவசதியை செயல்படுத்த இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
ஈரானில் 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கடந்த 13-ம் தேதி தெஹ்ரான் நகர போலீசார் கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை கண்டித்து ஈரானில் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். மாஷா அமினியின் சொந்த ஊரான சஹிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் மெல்ல மெல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் பரவத்தொடங்கியது.
ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த பெண்கள் தங்கள் ஹிஜாப்பை கழற்றி எறிந்தும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும், தங்கள் தலைமுடியை வெட்டியும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேவேளை, போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
போராட்டம் பரவுவதை தடுக்க இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் உள்ளிட்டோர் மீது போலீசார், பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஈரானுக்கு இணைய சேவைகளை விரிவுபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை அமெரிக்க அரசாங்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
போராட்டம் நடந்து வரும் ஈரானில் இணைய வசதிகள் சேதப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. ஈரான் அரசாங்கம் இணையத்தை முடக்கியதால், ஈரானில் இணைய சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற அமெரிக்க அரசின் விருப்பத்தை தொடர்ந்து, 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் மூலம் இணைய வசதியுடன் முனையங்கள் அமைத்து தர அதன் நிறுவனர் எலான் மஸ்க் ஏற்றுக்கொண்டுள்ளார்.
'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம், பூமியின் சுற்று வட்டப்பாதையில் ஆயிரக்கணக்கான 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள்களை நிறுவி உள்ளது. அவற்றை பயன்படுத்தி, உலக நாடுகளில் கண்ணாடி இழை இல்லாமல் அகண்ட அலைவரிசை இணையவசதியை அளித்து வருகிறது.
ஈரானில் 'ஸ்டார்லிங்க்' மூலம் இணையவசதியை செயல்பாட்டுக்கு கொண்டு வர இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.