இலங்கையில் மின்வாரிய பொறியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

இலங்கையில் இன்று மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு பல இடங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏற்பட்டது.

Update: 2022-06-09 13:55 GMT

Image Courtesy : Reuters

கொழும்பு,

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டி மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். உணவு, மருந்து, பொட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனை கண்டித்து அந்நாட்டு அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மக்கள் போராட்டம் காரணமாக ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து ரணில் விக்கிரமசிங்க பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தனது அரசு தீவிரமாக ஈடுபட்டு ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் இலங்கையின் மின்சாரத்துறையில் சில சட்ட திருத்தங்களுக்கு வழிவகை செய்ய இலங்கை அரசு திட்டமிட்டது. அதன்படி மின்சாரத்துறையின் புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்களுக்கான பொது ஏலம் மீதான கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் அரசின் இந்த திட்டத்தை கண்டித்து, இலங்கையின் மின்சாரத்துறை நிறுவனமான சிலோன் மின்வாரியத்துறையில்(சி.இ.டி) பணிபுரியும் 1,100 பொறியாளர்களில் சுமார் 900 பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். இதனால் இலங்கையில் இன்று மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு பல இடங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏற்பட்டது.

இதையடுத்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, இன்று போராட்டத்தில் ஈடுபட்ட பொறியாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்தினார். அவர்களது கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மின்வாரிய பொறியாளர்கள் தற்போது மீண்டும் பணிக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்