ரூ.3.32 லட்சத்தை கடித்து துப்பிய செல்லநாய்.. அதிர்ந்து போன உரிமையாளர்!
வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த செல்ல நாய் தனது உரிமையாளர் வைத்து இருந்த ரூ.3.32 லட்சம் பணத்தை கடித்து கிழித்து போட்டது;
வாஷிங்டன்,
வீட்டில் உள்ள ஒரு குடும்ப உறுப்பினருக்கு நிகராக பலரது வீட்டில் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. பெட்ரூம் முதல் கிட்சன் வரை வீட்டின் அனைத்து இடங்களுக்கும் சென்று வரும் அளவுக்கு செல்லம் கொடுத்து பலரும் வளர்த்து வருகிறார்கள்.
இப்படி வளர்க்கப்படும் நாய்கள் சில நேரங்களில் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை கவ்வி கொண்டு போய் விளையாடுவது என தனது சேட்டையை செய்து வைத்து விடும். இதனால் உரிமையாளர்கள் மனம் நொந்து சில நாட்கள் நாயை திட்டிக்கொண்டே இருப்பார்கள். இதேபோன்ற ஒரு சம்பவம்தான் தற்போது அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்தவர் கிளேட்டன். இவரது மனைவி கேரி லா. இந்த தம்பதி கோல்டன்டூடுல் எனும் இனத்தை சேர்ந்த நாயை செல்லமாக வளர்த்து வருகின்றனர். இதற்கு செசில் என பெயரிட்டுள்ளனர். குடும்பத்தின் ஒரு அங்கமாகவே மாறிபோன செசில், வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 4 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கடித்து துப்பியது.
இதனால் வீட்டின் அறை முழுவதும் டாலர்கள் கிழிந்து கிடந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கேரி லா தனது கணவரை அதிர்ச்சியுடன் அழைத்தார். ஓடி வந்து பார்த்த கிளேட்டன் ஒருநிமிடம் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனார். மொத்தம் ரூ.3.32 லட்சம் மதிப்பிலான 4 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கடித்து துப்பியிருந்தது.இதைப்பார்த்து மனவேதனையில் வெதும்பி போயுள்ளார்.