டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு : "ஏதாவது செய்யுங்கள்" என அதிபர் ஜோ பைடனை நோக்கி கூச்சலிட்ட பொதுமக்கள்
டெக்சாஸ் பள்ளியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்குள் கடந்த வாரம் துப்பாக்கியுடன் நுழந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான்.
இந்த கொடூர இந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக யுவால்டி நகரில் உள்ள ராப் ஆரம்பப்பள்ளிக்கு இன்று சென்றார்.
பள்ளி வளாகத்திற்கு வெளியே தற்காலிகமாக அமைந்துள்ள நினைவிடத்தில் அவர் சில நிமிடங்கள் அமைதியாக நின்று அஞ்சலி செலுத்தினார்.
அதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் ஆதரவு தெரிவித்த அதிபர் ஜோ பைடன், அவர்களுடன் அங்குள்ள தேவாலயத்தில் பிராத்தனை செய்தார். அவர் தேவாலயத்தில் இருந்து வெளியே வரும்போது அந்த தெருவில் நின்று இருந்த பொதுமக்கள் "ஏதாவது செய்யுங்கள்" என அவரை நோக்கி கூச்சலிட்டு வேண்டுகோள் விடுத்தனர்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக அதிபர் பைடன் " நிச்சயமாக , நிச்சயமாக" என தெரிவித்தார்.