அமெரிக்காவில் கார் விபத்து; இந்திய வம்சாவளி தம்பதி, மகள் பலி
அமெரிக்காவின் டல்லாஸ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிப்பை படிக்க திட்டமிட்டு இருந்த மகளை கல்லூரியில் கொண்டு சென்று விடும்போது இந்த விபத்து நடந்தது.
நியூயார்க்,
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் லம்பாஸ் கவுன்டி பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதன் மீது மற்றொரு கார் திடீரென மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். அவர்கள் அரவிந்த் மணி (வயது 45), பிரதீபா அரவிந்த் (வயது 40) மற்றும் இந்த தம்பதியின் மகள் ஆண்டிரில் அரவிந்த் (வயது 17) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். விபத்தில் சிக்கியதும் அவர்களுடைய கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இவர்களுடைய மகன் அதிரியன் (வயது 14) பெற்றோருடன் காரில் பயணம் செய்யவில்லை. இதனால், குடும்பத்தில் அந்த சிறுவன் ஒருவனே மீதமிருக்கிறான். இவர்கள் அனைவரும் லியாண்டர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.
ஆண்டிரில் பள்ளி படிப்பை முடித்து விட்டு, டல்லாஸ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிப்பை படிக்க திட்டமிட்டு இருந்துள்ளார். இதற்காக, மகளை கல்லூரியில் கொண்டு சென்று விடுவதற்காக அரவிந்த் தம்பதி ஆண்டிரிலை காரில் அழைத்து சென்றனர். அப்போது, இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் மற்றொரு காரின் ஓட்டுநர் உள்பட மொத்தம் 5 பேர் பலியாகி உள்ளனர். நான் பார்த்ததில், 26 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த கொடிய விபத்து நடந்துள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
எதிரே வந்த கார் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வந்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்திய தம்பதியின் கார் மணிக்கு 112 கி.மீ. வேகத்தில் சென்றது என கூறப்படுகிறது.