இந்தோனேசியாவில் நடுக்கடலில் கவிழ்ந்த படகு; 25 பேரை தேடும் பணி தீவிரம்
இந்தோனேசியாவில் நடுக்கடலில் இயந்திரம் பழுதடைந்து படகு கவிழ்ந்ததில் காணாமல் போன 25 பேரை தேடும் பணி தீவிரமடைந்து உள்ளது.
ஜகர்த்தா,
இந்தோனேசியாவின் மத்திய பகுதியில் அமைந்த தெற்கு சுலாவெசி மாகாணத்தின் மகஸ்சர் தலைநகரில் உள்ள பாவோடிர் துறைமுகத்தில் இருந்து படகு ஒன்று 42 பயணிகளுடன் புறப்பட்டு பங்கஜெனி மாவட்டத்தில் உள்ள துறைமுகம் நோக்கி சென்றுள்ளது.
ஜலசந்தி பகுதியில் சென்றபோது கடலில் பெரிய அலைகள் எழுந்துள்ளன. இதில் கப்பலின் இயந்திரம் பழுதடைந்து உள்ளது. இதனை தொடர்ந்து படகு நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது.
இதுபற்றிய தகவல் மாகாண அதிகாரிகளுக்கு நேற்று தெரிய வந்துள்ளது. உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது. சிறிய தீவு பகுதிக்கு அருகே படகு கவிழ்ந்த பகுதிக்கு 45 மீட்பு பணியாளர்களுடன் கப்பல் ஒன்று முன்பே புறப்பட்டு சென்று விட்டது.
இதுதவிர, விமானம் மற்றும் ஹெலிகாப்டர் ஒன்றும் தேடுதல் பணிக்கு அனுப்பி வைக்கப்படும். இதுவரை 17 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 25 பேரை தேடும் பணி தீவிரமடைந்து உள்ளது என மூத்த அதிகாரி வாஹித் என்பவர் கூறியுள்ளார்.