இங்கிலாந்து அரசை விமர்சித்த தொகுப்பாளரை பணி இடைநீக்கம் செய்த பிபிசி...!

இங்கிலாந்து அரசின் கொள்கையை விமர்சித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Update: 2023-03-12 07:08 GMT

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் செய்தி நிறுவனம் பிபிசி. இந்நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் தங்கள் கிளை அலுவலகங்களை திறந்து செய்திகளை ஒளிபரப்பி வருகிறது.

இதனிடையே, பிபிசி செய்தி நிறுவனத்தின் விளையாட்டு பிரிவு தொலைக்காட்சியில் (பிபிசி ஸ்போர்ட்ஸ்) பிரபலமான நிகழ்ச்சி 'மேட்ச் ஆப் தி டே'. இது கால்பந்து போட்டி தொடர்பாக வார இறுதியில் நடைபெறும் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியை ஹெரி லிங்கர் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில், இங்கிலாந்து அரசின் புதிய அகதிகள் கொள்கை குறித்து ஹெரி லிங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், இங்கிலாந்து அரசை அவர் விமர்சித்திருந்தார்.

இதனை தொடர்ந்து தொகுப்பாளர் பணியில் இருந்து ஹெரி லிங்கரை பிபிசி செய்தி நிறுவனம் தற்காலிகமாக நீக்கியது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இங்கிலாந்து அரசின் அகதிகள் கொள்கையை விமர்சித்த ஹெரி லிங்கரை பிபிசி செய்தி நிறுவனம் வேலையில் இருந்து தற்காலிகமாக நீக்கியதற்கு கண்டனக்குரல்கள் எழுந்தன. பிபிசியில் கருத்து சுதந்திரம் இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் ஹெரி லிங்கருக்கு சக தொகுப்பாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். மேலும், 'மேட்ச் ஆப் தி டே' நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என்று விளையாட்டு வீரர்களும் தெரிவித்தனர். இதையடுத்து, 'மேட்ச் ஆப் தி டே' நிகழ்ச்சியின் ஒளிபரப்பு நேரம் குறைக்கப்பட்டது. மேலும், பழைய வீடியோக்களை மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஹெரி லிங்கர் பிபிசி நிறுவனத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதை எதிர்த்து பல்வேறு நட்சத்திர தொகுப்பாளர்கள், விளையாட்டு வீரர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் இங்கிலாந்து செய்தித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் கலவரத்தில் இந்திய பிரதமர் மோடியின் நிலைப்பாட்டை விமர்சித்து பிபிசி சமீபத்தில் ஆவணப்படம் வெளியிட்டிருந்தது. அந்த ஆவணப்படுத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்