ஆஸ்திரேலிய பிரதமர் 8-ந்தேதி இந்தியா வருகிறார்; பிரதமர் மோடியுடன் பேச்சு

ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் 4 நாள் அரசு முறைப்பயணமாக 8-ந் தேதி இந்தியா வருகிறார். பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார்.

Update: 2023-03-04 21:25 GMT

ஆஸ்திரேலிய பிரதமர் வருகை

ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் (வயது 60), இந்தியாவில் 4 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் 8-ந்தேதி இந்தியா வருகிறார். 2017-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய பிரதமர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை. எனவே இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆஸ்திரேலியா அறிக்கை

இந்தப் பயணம் குறித்து ஆண்டனி அல்பானீஸ் அலுவலகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது.

அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் இந்தியாவில் 4 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆமதாபாத்தில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடக்க உள்ள 4-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடியுடன் இணைந்து பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் பார்க்கிறார்.

இந்தப் பயணத்தின்போது பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், ஆமதாபாத் தவிர்த்து மும்பை, டெல்லி நகரங்களுக்கும் செல்கிறார். இது ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு, பொருளாதார உறவுகளை மட்டுமின்றி இரு தரப்பு மக்களின் உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும்.

டெல்லியில் நடைபெறுகிற ஆஸ்திரேலிய, இந்திய வருடாந்திர தலைவர்கள் உச்சி மாநாட்டிலும் இந்தியப் பிரதமர் மோடியுடன் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் கலந்து கொள்கிறார்.

பிரதமர்கள் ஆண்டனி அல்பானீஸ், மோடி வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில்நுட்பம், ராணுவம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பது பற்றி விவாதிப்பார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'இந்தியா நெருங்கிய கூட்டாளி'

ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ், தனது இந்திய பயணம் குறித்து கூறியதாவது:-

இந்தியாவுடனான எங்கள் உறவு வலிமையாக உள்ளது. ஆனால் இன்னும் வலிமை ஆக முடியும். இந்திய, ஆஸ்திரேலிய கூட்டு வலிமையாக இருப்பது, நமது பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு நல்லது. வாய்ப்புகள் பெருகும். வர்த்தகம், முதலீடுகள் வளரும். நமது பொருளாதாரங்கள் பலப்படும். இது நேரடியாக மக்களுக்கு நன்மை பயக்கும்.

எதிர்காலத்தில், ஆஸ்திரேலியாவின் முக்கிய மற்றும் நெருங்கிய கூட்டாளியாக இந்தியா தொடரும்.

இந்த ஆண்டின் மத்தியில் நடக்க உள்ள 'குவாட்' தலைவர்கள் உச்சி மாநாட்டுக்காக பிரதமர் மோடியை ஆஸ்திரேலியாவுக்கு வரவழைப்பதை எதிர்நோக்கி உள்ளேன். அதே போன்று செப்டம்பரில் நடக்க உள்ள 'ஜி-20' தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்கு ஆவலாக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் மோடியுடன் பேசுகிறார்

மத்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள்:-

* ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் 8-ந் தேதி ஆமதாபாத் வந்து சேருகிறார். மும்பைக்கு 9-ந் தேதி சென்று விட்டு, டெல்லி வந்தடைகிறார்.

* ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசுக்கு ஜனாதிபதி மாளிகையில் 10-ந் தேதி சம்பிரதாய ரீதியிலான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

* பிரதமர் மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீசும் வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள். அப்போது இந்திய, ஆஸ்திரேலிய தரப்பு விரிவான பாதுகாப்பு உறவு, பிராந்திய, உலக விஷயங்கள் குறித்து பேசுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்