துப்பாக்கி சூட்டில் சிறுவன் பலி: போலீசாருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - 24 பேர் கைது
துப்பாக்கி சூட்டில் சிறுவன் பலியானதைத் தொடர்ந்து போலீசாருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.;
பாரீஸ்,
பிரான்ஸ் தலைநகர் பாரீசின் நாந்தேரே பகுதி சாலையில் சிக்னல் விதிகளை பின்பற்றாமல் கார் ஒன்று தறிகெட்டு ஓடியது. போலீசாரின் எச்சரிக்கையை ஏற்காமல் அந்த கார் சாலைகளில் பறந்தது. அதனை தடுக்க முயன்ற போலீசார் ஒருவரும் படுகாயமடைந்தார். இதனால் அந்த காரின் டிரைவர் மீது போலீசார் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த காரை பாரீஸ் நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் ஓட்டியதாக தெரிகிறது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் நேற்று உயிரிழந்தார்.
இதனால் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து நாந்தேரேவில் பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். போலீஸ் தலைமையகத்தில் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தை தோல்வி அடைய கலவரம் வன்முறையாக மாறியது.
பஸ்கள் உள்ளிட்ட பொது சொத்துக்களை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேரை போலீசார் கைது செய்தனர். கலவரம் நீடிக்காத வகையில் நாந்தேரே பகுதியில் ராணுவ வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.