பிரதமர் மோடியின் கால்களை தொட்டு வணங்கிய அமெரிக்க பாடகி மணிப்பூர் விவகாரம் குறித்து டுவீட்
மணிப்பூர் வன்கொடுமை குறித்து பகிரங்கமாக பேசிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக பாடகி மேரி மில்பென் கூறியுள்ளார்.;
வாஷிங்டன்,
பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்த போது, வாஷிங்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் மேரி மில்பென் என்ற அமெரிக்க பாடகி இந்திய தேசிய கீதத்தைப் பாடினார். பின்னர் பிரதமர் மோடியின் கால்களை தொட்டு வணங்கி அவரிடம் மேரி மில்பென் ஆசி பெற்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. மணிப்பூர் பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரத்திற்கு பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அமெரிக்காவில் பிரதமர் மோடியின் கால்களை தொட்டு வணங்கி ஆசி பெற்ற பாடகி மேரி மில்பென் இந்த விவகாரம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "மணிப்பூரில் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்காக என் மனம் வருந்துகிறது. இந்த மனிதாபிமானமற்ற செயல் குறித்து பகிரங்கமாக பேசியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. அந்த பெண்கள் இந்தியாவின் மகள்கள் மட்டுமல்ல, அவர்கள் கடவுளின் குழந்தைகள். மனிதர்களாகிய நம் அனைவருக்கும் கண்ணியம் என்பது முக்கியம். அந்த பெண்களுக்காகவும், விரைவான நீதிக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.