உலகில் முதல் முறையாக 'நைட்ரஜன் வாயு' செலுத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - செய்த குற்றம் என்ன?
குற்றவாளிக்கு 'நைட்ரஜன் வாயு' செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தை சேர்ந்த மதபோதகர் சார்லஸ் சென்னட். இவரது மனைவி எலிசபெத் (வயது 45). கடந்த 1988ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி எலிசபெத் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். அவரது மார்பு மற்றும் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்த சார்லஸ் தனது மனைவி பெயரில் இருந்த காப்பீட்டு பணத்தை அடையும் நோக்கில் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக கென்னத் யூஜின் ஸ்மித் மற்றும் ஜான் பாரஸ்ட் பார்க்கர் ஆகிய இருவருக்கும் தலா ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கொடுத்து எலிசபெத்தை கொல்ல உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, ஸ்மித் மற்றும் அவரது கூட்டாளி பார்க்கரும் எலிசபெத்தை கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் விசாரணையில் தெரியவர எலிசபெத்தின் கணவர் சார்லசை போலீசார் கைது செய்ய முயற்சித்தனர். ஆனால், விசாரணை தன்பக்கம் திரும்புவதை உணர்ந்த சார்லஸ் போலீசார் கைது செய்வதற்குள் தற்கொலை செய்துகொண்டார்.
அதேவேளை, எலிசபெத்தை கொலை செய்த ஸ்மித் மற்றும் பார்க்கரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான ஜான் பாரஸ்ட் பார்க்கருக்கு கடந்த 2010ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து மற்றொரு குற்றவாளியான கென்னத் யூஜின் ஸ்மித்திற்கு கடந்த 2022ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது. விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அந்த முயற்சி தோல்வியடைந்தது. ஸ்மித்தின் உடலில் ஊசி மூலம் விஷம் செலுத்தி மரண தண்டனை நிறைவேற்ற திட்டமிட்டிருந்த நிலையில் அதிகாரிகளின் கவனக்குறைவால் உடலில் மருந்து செல்லும் இணைப்பு சரியாக அமைக்கப்படவில்லை. இதனால், மரண தண்டனை நிறைவேற்றம் தடைபட்டது.
பின்னர், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைக்கும்படி ஸ்மித் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால், தண்டனை நிறைவேற்றுவதில் சிக்கல் நிலவி வந்தது. இதனிடையே, ஸ்மித்திற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இதையடுத்து, நைட்ரஜன் வாயு செலுத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என அலபாமா மாகாண சிறைத்துறை தெரிவித்தது.
இந்நிலையில், குற்றவாளி ஸ்மித்திற்கு இன்று நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே முதல்முறையாக நைட்ரஜன் வாயு செலுத்தி குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 1982ம் ஆண்டு முதல், விஷ ஊசி செலுத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதிய வகையில் நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று காலை 8 மணியளவில் குற்றவாளி ஸ்மித்தின் கைகள் கட்டப்பட்டு முகக்கவசம் அணிவிக்கப்பட்டது. அதனுடன் சுவாச குழாய் இணைக்கப்பட்டது. சுவாச குழாயில் தூய்மையான நைட்ரஜன் வாயு செலுத்தப்பட்டது. நைட்ரஜன் வாயுவை சுவாசித்த சில நிமிடங்களில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஸ்மித் உயிரிழந்தார். காலை 8.25 மணிக்கு ஸ்மித்தின் உயிர் பிரிந்ததாக சிறைத்துறை தெரிவித்தது.
தூக்கு தண்டனை, விஷ ஊசி வரிசையில் குற்றவாளிக்கு 'நைட்ரஜன் வாயு' செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உலகிலேயே இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.