செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் சமூகத்துக்கு ஆபத்து - ஜோ பைடன் கருத்து
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் சமூகத்துக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
வாஷிங்டன்,
செயற்கை நுண்ணறிவில் அசாத்திய ஆற்றல் கொண்ட 'சாட்-ஜிபிடி' கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வந்தது முதல், செயற்கை நுண்ணறிவை எவ்வாறு ஒழுங்குப்படுத்துவது, அதன் சாதக, பாதகங்களை எதிர்கொள்வது எப்படி என்பன போன்ற விவாதங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் அமெரிக்காவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஜனாதிபதியின் ஆலோசகர்கள் குழுவின் கூட்டம் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் ஜனாதிபதி ஜோ பைடன் பங்கேற்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர்கள் மத்திய உரையாற்றினார்.
அப்போது அவர், "செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சமூகத்துக்கு பெரும் ஆபத்தாக இருக்கலாம். ஆனால் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தங்களது தயாரிப்புகளை பொதுவெளியில் வெளியிடுவதற்கு முன்பு அவற்றை பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதிசெய்யும் பொறுப்பு தொழில்நிறுவனங்களுக்கு உள்ளது.
நோய் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற சவால்களைச் சமாளிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உதவக்கூடும். ஆனால் அந்த தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்கள் நமது சமூகத்துக்கும், நமது பொருளாதாரத்துக்கும், நமது தேசிய பாதுகாப்புக்கும் சாத்தியமான அபாயங்களை தீர்க்க வேண்டும்" என கூறினார்.