பலூசிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள்; 26 பேர் பலியான சோகம்

பலூசிஸ்தான் தலைமை செயலாளர் மற்றும் ஐ.ஜி.யிடம் இதுபற்றி அறிக்கை ஒன்றை அளிக்கும்படி, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.;

Update:2024-02-07 17:31 IST
பலூசிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள்; 26 பேர் பலியான சோகம்

பலூசிஸ்தான்,

பாகிஸ்தானில் நாளை (8-ந்தேதி) பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று அடுத்தடுத்து 2 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில், மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இதுபற்றி போலீசார் கூறும்போது, பிஷின் பகுதியில் அஸ்பந்தியார் காக்கர் என்ற சுயேச்சை வேட்பாளரின் தேர்தல் அலுவலகம் வெளியே முதல் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.

காக்கர், என்.ஏ.-265 தொகுதியிலும் மற்றும் பலூசிஸ்தான் சட்டசபை தொகுதிகளான பி.பி.-47 மற்றும் பி.பி.-48 ஆகிய தொகுதிகளில் இருந்தும் போட்டியிடுகிறார். இதேபோன்று முதல் குண்டுவெடிப்பு நடந்ததும், கீலா சைபுல்லா பகுதியில் மற்றொரு குண்டுவெடிப்பு நடந்தது.

இதற்கு முன் துணை ஆணையாளர், யாசீர் பஜாய் கூறும்போது, தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர் என கூறினார்.

காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என டாக்டர் ஹபீப், ஜியோ நியூசிடம் கூறியுள்ளார்.

இதன் எதிரொலியாக குவெட்டாவில் உள்ள மருத்துவமனைகளில் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டது. கூடுதல் பணியாளர்களுக்கும் அழைப்பு விடப்பட்டது. இந்த தாக்குதல்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். அந்நாட்டில் தேர்தல் நடைபெற 24 மணிநேரம் கூட இல்லாத நிலையில், நடந்த இந்த தாக்குதல் மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி அறிக்கை ஒன்றை அளிக்கும்படி, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஆனது, பலூசிஸ்தான் தலைமை செயலாளர் மற்றும் ஐ.ஜி.யிடம் கேட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்