பன்முக தன்மையுடன் அமைந்த லிஸ் டிரஸ் மந்திரி சபை; ரிஷி சுனாக்கிற்கு இடமில்லை

இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தலைமையிலான மந்திரி சபையில் அவரது போட்டி வேட்பாளரான ரிஷி சுனாக் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடமில்லை.

Update: 2022-09-07 15:17 GMT

லண்டன்,



இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகிய சூழலில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2-ந்தேதி முடிவடைந்தது.

இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனாக்கை வீழ்த்தி, வெளியுறவு மந்திரியாக இருந்த லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.

ஆளும் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார்.

இதன்படி, வெற்றி பெற்ற டிரஸ், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்திடம் சென்று ஆசி பெற்றார். அப்போது, லிஸ் டிரசை, ராணி எலிசபெத் பிரதமராக அறிவித்தார்.

இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் தலைமையிலான மந்திரி சபையின் முதல் கூட்டம் இன்று லண்டன் நகரில் உள்ள எண் 10, டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் பல அறிவிப்புகளை டிரஸ் வெளியிட்டார். அவரது மந்திரி சபையில் முக்கிய பதவிகளில் நாடாளுமன்றத்தின் பன்முக கலாசார, பாரம்பரிய தன்மை கொண்ட சிறுபான்மையினர் அதிக அளவில் இடம் பிடித்து உள்ளனர். இதன்படி, உள்துறை மந்திரியாக இந்திய வம்சாவளியான சுவெல்லா பிரேவர்மென் இடம் பெற்றுள்ளார். இவரது தாயார் உமா தமிழ்நாட்டை சேர்ந்தவர்.

இதேபோன்று இந்திய வம்சாவளியான இந்தியாவின் ஆக்ரா நகரில் பிறந்தவரான அலோக் சர்மாவும் இடம் பிடித்து உள்ளார். அவர் சி.ஓ.பி.26 எனப்படும் ஐ.நா.வுக்கான பருவகால மாற்றத்தின் தலைவருக்கான பதவியை தக்க வைத்து கொண்டுள்ளார். இதற்கு முன்பும் அவர் இந்த பதவியை வகித்து வந்துள்ளார்.

சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராம விவகாரங்களுக்கான உள்துறை மந்திரியாக, இலங்கை மற்றும் இந்திய பாரம்பரியம் கொண்ட, லண்டனில் பிறந்தவரான ரணில் ஜெயவர்த்தனே நியமிக்கப்பட்டு உள்ளார்.

லிஸ் டிரஸ் முன்பு பதவி வகித்த வெளியுறவு மந்திரி பதவியானது சியர்ரா லியோன் மற்றும் வெள்ளையின பாரம்பரியம் கலந்த ஜேம்ஸ் கிளவெர்லிக்கு வழங்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தின் கருவூல மந்திரியாக முதன்முறையாக கருப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த மந்திரி சபையில் முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனாக்கிற்கு இடமில்லை. பிரதமர் வேட்பாளர் போட்டியில் சுனாக்கிற்கு ஆதரவு தெரிவித்தவர்களான பலருக்கும் பதவி கிடைக்கவில்லை. இதன்படி, முன்னாள் நீதி மந்திரி டோமினிக் ராப், போக்குவரத்து மந்திரி கிராண்ட் ஷாப்ஸ் மற்றும் சுகாதார மந்திரி ஸ்டீவ் பார்கிளே ஆகியோர் பதவி கிடைக்காத குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

Tags:    

மேலும் செய்திகள்