ஜேம்ஸ் பாண்ட் உருவாகி 60 ஆண்டுகள் நிறைவு... சிகாகோவில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட புதிர் விளையாட்டு மைதானம்
சோள வயலில் ஜேம்ஸ் பாண்ட் உருவத்தில் சிக்கலான புதிர் விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.;
வாஷிங்டன்,
இங்கிலாந்தைச் சேர்ந்த நாவலாசிரியர் இயான் பிளெம்மிங் என்பவரால் 1953 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது 'ஜேம்ஸ் பாண்ட்' என்ற கதாபாத்திரம். ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு '007' என்ற குறியீடும் வழங்கப்பட்டது.
இந்த கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இயான் பிளெம்மிங் 12 நாவல்களையும், 2 சிறுகதை தொகுப்புகளையும் எழுதினார். இந்த கதாபாத்திரத்தை வைத்து முதல் முதலாக 1962 ஆம் ஆண்டு 'டாக்டர் நோ' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. சீன் கானரி முதல் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருந்தார்.
அன்று முதல் கடைசியாக 2021-ல் வெளியான 'நோ டைம் டு டை' திரைப்படம் வரை, மொத்தம் 27 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த வரிசை திரைப்படங்களுக்கென உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்ட் தோன்றி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் உள்ள சோள வயலில் பிரம்மாண்டமான புதிர் விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 28 ஏக்கர் பரப்பளவில் ஜேம்ஸ் பாண்ட் உருவத்தில் சிக்கலான வழிகளைக் கொண்டு இந்த புதிர் விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிர் விளையாட்டில் சுமார் 16 கி.மீ. நீளம் கொண்ட வழித்தடங்கள் உள்ளன.
இந்த சோள வயலின் உரிமையாளர்கள் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விதமாக புதிர் விளையாட்டுகளை அமைக்கின்றனர். இந்த ஆண்டு ஜேம்ஸ் பாண்ட் 60-வது வருடத்தை கொண்டாடும் விதமாக இந்த வகையில் புதிர் அமைக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.