தைவானில் அதிர்ச்சி; 24 மணிநேரத்தில் 240 நிலநடுக்கங்கள் பதிவு
தைவானின் கடலோர பகுதியில் கடந்த 3-ந்தேதி ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 821 பேர் காயமடைந்தனர்.;
தைப்பே,
தைவானின் கிழக்கு கடலோர பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் 240 நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளன. இவற்றில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது. இதனை அந்நாட்டிலுள்ள மத்திய வானிலை ஆய்வு நிர்வாகத்தின் நிலநடுக்க அறிவியல் மைய இயக்குநர் வூ சீன்-வு இன்று தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஹுவாலியன் கவுன்டி பகுதியில் நேற்று மாலை 3.08 மணி முதல் இன்று மதியம் 1.30 மணி வரையில் மொத்தம் 247 நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது. இதேபோன்று, கடந்த 3-ந்தேதியில் இருந்து இதுவரை பதிவான நிலநடுக்கங்களின் எண்ணிக்கை 1,095 ஆக உள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
தைவானின் கடலோர பகுதியில் கடந்த 3-ந்தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் தைவானில் ஏற்பட்ட மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என அறியப்படுகிறது. இதில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். 821 பேர் காயமடைந்தனர்.